
தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களுக்கு இன்று 88ஆவது பிறந்த நாள். ????
இந்த உலகில் இசை உள்ளவரை சுசீலா பாடிய பாடல்களும் உயிருடன் இருக்கும். அத்தகைய மாபெரும் இசைக்குயிலுக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவரை பற்றிய சில நினைவுகளையும் பகிர்ந்து கொள்வோம்
* ஆந்திராவில் விஜயநகரம் என்ற இடத்தில் புலப்பாக்க முந்தராவ் – கவுத்தாரம் தம்பதிகளுக்கு 1935ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகளும் மூன்று சகோதரர்களும். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். மேலும் ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.
* 15 வயதிலேயே சென்னை வானொலியில் ‘பாப்பா மலர்’ என்ற நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது ‘பெற்ற தாய்’ படத்தில் முதன்முதலில் சுசிலாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் 1955ல் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’, ‘உன்னைக் கண் தேடுதே’ ஆகிய பாடல்களால் பிரபலமடைந்தார்.

* பி.சுசீலா திரையுலகில் நுழைந்த காலத்தில் பி. லீலா, எம்.எல். சந்தகுமாரி, ஜிக்கி போன்ற பிரபல பாடகிகள் தமிழ் திரையுலகை ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அறிமுக பாடகியான சுசீலாவின் ஆரம்ப இசைப் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஆனால் அவரது தனித்தன்மை வாய்ந்த இனிமையான குரலால் அவருக்கு வாய்ப்பு குவிந்ததோடு, அரை நூற்றாண்டு காலம் அவரது குரல் தமிழ்த்திரையுலகில் ஒலிக்க வைத்தது.
*தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழை மிக அழகாக, பிழையின்றி உச்சரிப்பதில் வல்லவர். இவரது தமிழ் உச்சரிப்பை அந்த காலத்து இசையமைப்பாளர்கள் நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் வரை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
* சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இவர் பாடிய ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்ற பாடல் சுசீலாவுக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்தது. அதன் பின்னர் சவாலே சமாளி படத்தில் இவர் பாடிய ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுபாடு’, என்ற பாடலுக்கும், மூன்று தெலுங்கு மொழி பாடல்களுக்கும் என மொத்தம் 5 தேசிய விருதுகளை பெற்றார்
* இவர் பாடிய புகழ்பெற்ற பாடல்கள் சில:
‘நான் மலரோடு தனியாக’,
‘அமைதியான நதியினிலே ஓடம்’,
‘அடுத்தாத்து அம்புஜத்த’,
‘வாழ நினைத்தால் வாழலாம்’,
‘அன்று வந்தததும் இதே நிலா’,
‘பேசுவது கிளியா’,
‘விழியே கதையெழுது’,
‘ஆயிரம் நிலவே வா’,
‘இயற்கை என்னும் இதயக்கனி’,
‘நெஞ்சம் மறப்பதில்லை’,
‘ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்’,
‘வளர்ந்த கலை’,
‘பால் வண்ணம்’,
‘என்னருகே நீ இருந்தால்’,
‘அனுபவம் புதுமை’,
‘காத்திருந்த கண்களே’,
‘தாமரைக் கன்னங்கள்’,
‘ரோஜா மலரே ராஜகுமாரி’,
‘தமிழுக்கு அமுதென்று பேர்’,
‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’,
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’,
‘உன்னை ஒன்று கேட்பேன்’,
‘பார்த்த ஞாபகம் இல்லையோ’,
‘சொன்னது நீதானா’,
‘ஆண்டவனே உன் பாதங்களில்’,
‘நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்’,
‘நாளை இந்த வேளை’,
‘மன்னவனே அழலாமா’
‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’
‘உன்னைக் காணாத’
‘நினைக்கத் தெரிந்த மனமே’,
‘ஆலயமணியின் ஓசையைக் நான் கேட்டேன்’
என இந்த பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். இதற்கு முடிவே இல்லை
*சுசீலா பெற்ற விருதுகள்:
1969, 1971, 1976, 1982, 1983 என ஐந்து முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘தேசிய விருது’
2008 ஆம் ஆண்டு: மத்திய அரசால் ‘பத்ம விபூஷன்’ விருது.
2001 ஆம் ஆண்டு: ஆந்திர மாநில அரசால் ‘ரகுபதி பெங்கையா விருது’.
1969, 1981, 1989 என மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘தமிழ்நாடு மாநில அரசின் விருது’ வழங்கப்பட்டது.
1971 மற்றும் 1975 என இரண்டு முறை ‘கேரளா மாநில அரசின் விருது’.
1977, 1978, 1982, 1984, 1987, 1989 என ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘ஆந்திர மாநில அரசின் விருது’
* 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பி.சுசீலா பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என பல மொழிப் படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ள இவர் மிக அதிக பாடல்களை பாடியவர் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்தது.
* இன்னும் எத்தனைக் காலங்கள் சென்றாலும் பி. சுசீலா அவர்களின் மயக்கும் குரலில் உதிர்ந்த நெஞ்சை வருடும் அனைத்துப் பாடல்களும், இசை நெஞ்சங்களின் மனதில் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இசையுலகின் மகாராணியாக வாழ்ந்து வரும் கலைமகளின் கைப்பொருளான பி.சுசீலா இன்னும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து நிறைய பாடல்களை தமிழர்களுக்கு வழங்க வேண்டும.????????
தொகுப்பு : ஆந்தையார்
