திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

 

தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

 

தென் மாவட்ட மக்கள் குறிப்பாக பெருசுகள் காதுகளில் சுமந்து திரிகிற தண்டட்டி’ எனப்படும் கனமான ஆபரணத்தை மையப்படுத்திய மண்மணம் மாறாத கதையில் காமெடியும் கலந்த படைப்பு தான் தண்டட்டி!

கிராமத்தில் வயதான பெண்மணி இறந்துபோகிறார். அவரது காதுகளில் தொங்கும் சில லட்ச ரூபாய் மதிப்புமிக்க ‘தண்டட்டி’யை அவருடைய மகனும் மகள்களும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்; திட்டமிடுகிறார்கள். உறவினர்கள், ஊர்க்காரர்கள், அக்கம் பக்கத்தினர் என ஏராளமானோர் கூடியிருக்கும் சுழலில் திடீரென அந்த தண்டட்டி காணாது போகிறது.

வேறு ஒரு காரணத்துக்காக அந்த இடத்திற்கு வந்திருக்கும் காவல்துறை அதிகாரிக்கு, தண்டட்டியை திருடியது யார் என கண்டுபிடிக்கும் பொறுப்பு தொற்றிக் கொள்கிறது. விசாரணையை தொடங்குகிறார். கதைக்களம் சூடுபிடிக்கிறது…

தண்டட்டி யாரால் களவாடப்பட்டது என்பது சுவாரஸ்யமான கிளைமாக்ஸ்.

கதையின் நாயகியாக ரோகிணி. தண்டட்டி அணிந்த வயதான பெண்மணி கதாபாத்திரத்தில் தளர்ந்த நடை, தழுதழுத்த குரலில் வசன உச்சரிப்பு என கச்சிதமாய் வாழ்ந்திருக்கிறார்.

காவல்துறை பணியில் உணர்ச்சிவசப்பட்டு, குற்றவாளிகளை தன் அதிகார எல்லைதாண்டி தண்டித்து துறை ரீதியான கண்டனங்களை சம்பாதிப்பவராக அறிமுகமாகும் பசுபதி தனது முதல் காட்சியிலேயே கலகலப்பூட்டி கவனம் ஈர்க்கிறார் அவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும் ரகம்!

ரோகிணியின் மகனாக வருகிற விவேக் பிரசன்னாவின் குடிபோதை சலம்பல் ரசிக்க வைக்கிறது

ரோகிணியின் மகள்களாக வருகிற தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம், பேரனாக வருகிற ‘மண்டேலா’ முகேஷின் உள்ளிட்டோரின் நடிப்பும் கதையோட்டத்தின் தேவையை சரியாய் பூர்த்தி செய்திருக்கிறது. இதற்காக இயக்குனர் ராம் சங்கையாவை பாராட்டலாம்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவையும், கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையையும் பாராட்டலாம்!

மொத்தத்தில் தண்டட்டி தரமான தங்க ஆபரணம் போல தண்டட்டி கதையும் வெயிட்டான ரசனை ரகம்!

 

கோடங்கி மதிப்பீடு 3.5/5

 

 

441 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன