ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

ரத்தம் வன்முறை படமா? கோடங்கி விமர்சனம் 3/5

 

ரத்தம் வன்முறை படமா? கோடங்கி விமர்சனம்

 

பிரபல பத்திரிக்கை நிறுவனத்தில் பத்திரிகையாளர் செழியன் என்பவரை அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் கொலை செய்கிறார். தனது தலைவரைப் பற்றி செய்தி எழுதியதற்காக தான் இந்த கொலையை செய்ததாக தனது செயலை நியாயப்படுத்துகிறான் கொலையாளி. இந்த கொலையை அந்த இளைஞர் ஏன் செய்கிறார் என்கிற புதிரில் இருந்து தொடங்கும் கதை மெல்ல நமது கதாநாயகன் ரஞ்சித் குமாரை (விஜய் ஆண்டனி) நோக்கி நகர்கிறது.

ஒரு காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளராக இருந்த ரஞ்சித் தற்போது தனது மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். தனது மனைவி இறந்துவிட்ட  குற்றவுணர்ச்சியால் தீவிர மதுபோதைக்கு அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் மீண்டும் தனது வேலைக்குத் திரும்பும் ரஞ்சித் மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகளை செய்பவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
வழக்கமான ஒரு கிரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் ரத்தம் திரைப்படம் தீவிர சமூகப் பிரச்சனைகளை எப்படி ஒரு கும்பல் தங்களுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்பதைப் பற்றிய படமாக உருவாகி இருக்கிறது. இந்த வில்லன் கூட்டத்தின் தலைவராக இருக்கும் மஹிமா நம்பியார் க்யூட்டான ஒரு கொடூர வில்லியாக நடித்திருக்கிறார்.

புலனாய்வு அதிகாரியாக போலீஸ் வேடங்களில் நடித்த அனுபவமிக்க விஜய் ஆண்டனி, இந்தப்படத்திலும் அதே போல ஒரு வேடத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.பாடல்கள் இல்லாதது அவருக்கு மேலும் வசதியாகப் போயிற்று.

ரம்யாநம்பீசன், நந்திதா சுவேதா, மகிமா நம்பியார் ஆகிய மூன்று நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். ஒருபாடல் மற்றும் சில காட்சிகளில் மட்டும் வந்துபோகிறார்கள் என்று குறை சொல்லிவிட முடியாது. ஏனெனில் காதல் காட்சிகள் காதல்பாடல்கள் என எதுவுமில்லை.

ஜான்மகேந்திரன்,நிழல்கள் ரவி, ஓஏகே.சுந்தர், மிஷாகோசல், கலைராணி ஆகிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

கண்ணன் நாராயணன் இசையமைத்திருகிறார்.விளம்பரப்பாடல் தவிர படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை பல நேரங்களில் இருக்கிறதா என யோசிக்க வைக்கிறது சில இடங்களில் ஏன் இந்த இசை வருகிறது என்றும் தோன்றுகிறது.

கோபிஅமர்நாத் கதைக்கேற்ற ஒளிப்பதிவைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

கலை இயக்குநர் செந்தில்ராகவன், ஏதாவதொரு பத்திரிகை அலுவலகம் சென்று பார்த்துவிட்டு செட் அமைத்திருக்கலாம்.

போலீஸ் அதிகாரிக்குப் பதிலாக கதாநாயகனுக்குப் பத்திரிகையாளர் வேடம் கொடுத்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.படம் முழுக்க ஒரு ரகசிய போலீஸ் போலவே விஜய் ஆண்டனி வந்து போகிறார்

காமெடி படங்களில் அடையாளப்பட்ட சி.எஸ்.அமுதன், இந்தப் படத்தில் புதிய முயற்சி செய்திருக்கிறார்.

மொத்தத்தில் வன்முறை தெரிப்பதை குறிக்கும் வகையில் “ரத்தம்” என டைட்டில் வைத்தாலும் உள்ளே அதற்கான எந்த தடயமும் பெரிய அளவில் இல்லை என்பதே ஆறுதலான உண்மை..!

 

-கோடங்கி 3/5

75 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன