வியாழக்கிழமை, பிப்ரவரி 22
Shadow

கிரிக்கெட் விளையாட்டை கட்டி வைத்துள்ள “நூல்” அறுத்த புளூ ஸ்டார் கோடங்கி விமர்சனம் 4/5

 

ரஞ்சித் தயாரிப்பில் புதிய முன்னெடுப்பை எடுத்திருக்கிறது புளூ ஸ்டார்.

ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வீ, கீர்த்தி பாண்டியன், பக்ஸ் நடித்த புளூ ஸ்டார் இந்த வார வரவில் மிக வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கிறது.

வழக்கமாக ரஞ்சித் கம்பெனி படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலி வேதனை நியாயங்களை சொல்லி வந்தார்கள்.
முதல் முறையாக ஊருக்கு நன்மை என்றால் சாதி வட்டத்தில் சிக்காமல் ஒன்றாக இணைந்து போராடினால் வெற்றி பெறலாம் என்ற ஒற்றை வரி சித்தாத்தத்தை கையில் பிடித்து படமாக்கி இருக்கிறார்கள்.

போற போக்கில் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் சாதி வெறியையும் பட்டவர்த்தனமாக தோலுரித்து தொங்கவிட்டிருக்கிறார் “புல்லட் பாபு” கதாபாத்திரம் மூலம்.

அப்படி என்ன கதைன்னு யோசிக்கிறீங்களா… “வழக்கம் போல ஒரு கிராமம் காலனி பகுதி ஊர் பகுதி இதில் உள்ள பசங்க 2 குழுவா கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.
ஒரு முறை விளையாட்டின் போது காலனியை சேர்ந்த பக்ஸ் வெட்டப்படுகிறார்.
அதோடு 2 குழுக்களும் எதிர் எதிராக விளையாடுவதை கூட தவிர்த்து விடுகிறார்கள்.

இந்த சூழலில் நீண்ட காலத்திற்கு பின் திருவிழாவில் காலனியைச் சேர்ந்த அசோக் செல்வன் குழுவும், ஊர் பகுதியை சேர்ந்த சாந்தனு குழுவும் கிரிக்கெட் ஆடவேண்டிய சூழல் வருகிறது.
சாந்தனு நகரத்தில் உள்ள பிரபலமான கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இருந்து பணம் கொடுத்து வீரர்களை அழைத்து வருகிறார்.

அதன் பின் அந்த நகரத்து கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சாந்தனுக்கு ஏற்பட்ட அவமானத்தை பார்த்து அசோக் செல்வன் அதை தட்டிக்கேட்க அங்கே ஒரு சவால் எழுகிறது…

அதன்பின் சாதியை மறந்து அசோக் செல்வன்-சாந்தனு இணைந்து நகரத்தில் கிரிக்கெட் விளையாட வருகிறார்கள்.

அதில் வெற்றி பெற்றார்களா? என்ன நடந்தது? இதுதான் புளூ ஸ்டார் கதை.

இதற்கிடையே கூட படிக்கும் கீர்த்தி பாண்டியன் மீது அசோக் செல்வனுக்கு காதல். அந்த காதல் கை கூடியதா இல்லையா என்பதும் இன்னொரு கிளைக்கதை.

ஒடுக்கப்பட்ட மக்களும், இடைச்சாதி மக்களும் இணைந்தால் உயர்சாதி ஆட்டத்தை அடக்கலாம் என்பதை ரொம்ப அழுத்தமாக பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார்.

கிரிக்கெட் விளையாட்டில் பின்னி பிணைந்து கட்டப்பட்ட ” நூல்” இந்த கதையில் அறுக்கப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளது.

திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படும் போதும், சாதியால் ஒடுக்கப்படும் போதும் அசோக் செல்வன் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

ரொம்ப நாளைக்கு பின் சாந்தனுவுக்கு சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம். உணர்ந்து நடித்திருக்கிறார்.

இவர்கள் இருவரை விட ப்ரித்வீ தனியாக ஸ்கோர் அடிக்கிறார்.

கொஞ்சமாக வந்தாலும் கீர்த்தி பாண்டியன் ரசிக்க வைக்கிறார்.

கோவிந்த் வசந்தாவின் இசை பலம் சேர்க்கிறது.

ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டுமானால் படத்தின் பெயர் தான் “புளூ ஸ்டார்” பெயரில் உள்ள “புளூ” அதாங்க “நீலம்” கதையிலும் இல்லை, காட்சிகளிலும் இல்லை. அதனால் தான் இந்த வார “ஸ்டார்” படமாக மாறி இருக்கிறது “புளூ ஸ்டார்”

– கோடங்கி

மதிப்பீடு 4/5

 

85 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன