2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை.
தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன.
அந்த கோரிக்கைக்கு ஏற்ப ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறவில்லை.
வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும். இம்முறை அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் – செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
வழக்கமாக பட்ஜெட் தாக்கலுக்கு முதல் நாள் நிதி அமைச்சர் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்குவது வழக்கம்.
தேர்தலுக்கு முந்தய தினம் வரை தமிழ் தமிழ் என தமிழ் பெருமை பேசி வந்த மோடியின் இந்த முதல் பட்ஜெட்டில் தமிழர்களுக்கு மொத்தமாக “அல்வா” கொடுத்திருக்கிறது இந்த பாஜக மைனாரட்டி அரசு.