செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

அழுத்தமான அரசியல் பேசியிருக்கும் விடுதலை பாகம் 2 திரைவிமர்சனம்

 

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் விடுதலை பாகம் 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன்

இதில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷே​hர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், சேதன், இளவரசு, தமிழ், சரவண சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வெற்றி மாறனின் விடுதலைப் பகுதி 1 முடிவடைந்த இடத்திலிருந்து விடுதலைப் பகுதி 2 தொடர்கிறது. விஜய் சேதுபதி ஒரு சக்தி வாய்ந்த வாத்தியார் பெருமாள் உருவமாக காட்டப்பட விடுதலைப் பகுதி 2 -ல் புரட்சித் தலைவர் பெருமாள் உருவாக கடந்த வந்த பாதைகளின் சாரம்சமாக தொகுத்து அதை சூரி தன் தாய்க்கு கடிதம் வாயிலாக நடந்த சம்பவங்களை விவரித்து எழுதும் குரல் வடிவமாக பின்னணியில் வழங்கியுள்ளார்.

காவலர் குமரேசன் (சூரி) உதவியுடன் புரட்சித் தலைவரான பெருமாள் (விஜய் சேதுபதி) காவல்துறையினரால் ரகசியமாக கைது செய்யப்பட தலைமைச் செயலாளர் சுப்பிரமணியன் (ராஜீவ் மேனன்) அவரது ஆதரவாளர்களின் ஆலோசனைப்படி பெருமாளை அடர்ந்த காடு வழியாக கேம்ப்புக்கு சேத்தன் தலைமையில் அழைத்து வர ஏற்பாடு செய்கின்றனர்.  காட்டு பாதையில் சேத்தன் தலைமையில் பெருமாள் கைவிலங்கிடப்பட்டு ஜீப்பில் பயணிக்க ரகசியமாக நடைபெறும் இந்த நடவடிக்கை பெருமாளின் ஆதரவாளர்களுக்கு தெரிந்து விடுகிறது.

இதனிடையே இவர்கள் பயணம் செய்யும் போது பெருமாள் தன்னுடைய சாதாரண வாழ்;க்கை எப்படி புரட்சியாளனாக மாற்றியது என்பதையும், தன்னுடைய காதலையையும் போலீஸ் குழுவிடம் விவரிக்க தொடங்குகிறார். வாத்தியாராக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு பணக்கார நில உரிமையாளரின் கொடுமையால் அதிர்ச்சியடைந்த பெருமாள் இடதுசாரி அரசியல் கட்சியில் சேர்ந்து தொழிற்சங்கத்தில் இணைக்கப்படுகிறார்.

அங்கு அவர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடும் நேரத்தில் தொழிற்சாலை முதலாளியின் மகள் மகாலட்சுமியை (மஞ்சு வாரியர்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். பெருமாள் தனது வழிகாட்டியான ஆசானான இடது சாரி கட்சி தலைவர் கேகே (கிஷோர்) இடமிருந்து விலகி பல இன்னல்களை சந்திக்கும் மக்களுக்காக ஆயுதமேந்திய கிளர்ச்சியை மேற்கொள்ள முற்படுகிறார்.

இதனால் தனித்து விடப்பட்ட கேகே நிலை என்னானது? ஆயுதமேந்திய கிளர்ச்சி பெருமாளுக்கு வெற்றி தந்ததா? இதனால் பாதிக்கப்பட்டது யார்? பிடிபட்ட பெருமாளை புரட்சியாளர்கள் போலீசாரிடமிருந்து மீட்டனரா? இறுதியில் பெருமாளின் நிலை என்ன? இதனால் குமரேசன் எடுத்த அதிரடி முடிவு என்ன? என்பதே படத்தின் பரபரப்பான க்ளைமேக்ஸ்.

பெருமாள் வாத்தியாராக நடிக்கும் விஜய் சேதுபதி இயல்பான நடிப்பில் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அப்பாவி பள்ளி வாத்தியார் ,, கம்யூனிச இயக்கவாதி, தொழிற்சங்கவாதி, ஆயுதம் ஏந்தி போராடும் போராளி, தமிழர் மக்கள் படை தலைவர் என பல பரிணாமங்களில் பயணித்து அன்பு, காதல், பாசம், வீரம் என அனைத்திலும் உணர்வுப்பூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .

முதல் பாகத்தின் நாயகன் சூரிக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் படத்தின் இறுதி காட்சிகளில் கவனிக்க வைக்கிறார் .நாயகியாக நடிக்கும் மஞ்சு வாரியர் கம்யூனிசத்தை விரும்பும் பெண்ணாக கதைகேற்றபடி இயல்பான நடிக்கிறார் ..

ஒடுக்கப்பட்ட இனத்தின் இளைஞராக கென் கருணாஸ் , பண்ணை முதலாளியாக வரும் போஸ் வெங்கட் , கம்யூனிச தலைவராக நடித்திருக்கும் கிஷோர்,இயக்குநர் அனுராக் காஷ்யப், தலைமை செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் , இயக்குனர் தமிழ் , சேத்தன், , வின்சென்ட் அசோகன் , இளவரசு என அனைவரும் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர் .

“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” என்ற வசனத்தின் மூலம் அரசியலில் சுலபமாக நுழைந்து, விரைவில் அரியணையில் அமர நினைக்கும் ரசிகர்களை கொண்ட தலைவர்களுக்கு சம்மட்டியடி கொடுத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது ஆழமான வசனங்கள் மூலம் படம் முழுவதும் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறார்.

உழைப்புக்கேற்ற கூலி, வார விடுமுறை, பண்டிகை போனஸ் என்று தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுத்தருவதற்காக பலர் தங்கள் உயிரை பணயம் வைத்ததை நினைவுப்படுத்தியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வளர்ச்சி என்ற பெயரில் பொதுமக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அரசு எந்திரத்தையும் அசைத்துப் பார்த்திருக்கிறார்.

இளையராஜாவின் இசையில் பாடல்களுடன் பின்னணி இசையும் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .

படத்தில் பல குறைகள் தெரிந்தாலும் இந்த குறைகளை பார்வையாளர்கள் மறந்துவிடும் அளவுக்கு அழுத்தமான அரசியல் பேசியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மூழ்கியிருக்கும் இளைஞர்களை அரசியலில் மூழ்கடிக்க முயற்சித்திருக்கிறார் .சபாஷ்!

186 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன