
DNA விமர்சனம் 3.5/5
காதல் தோல்வியில் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினரால் வெறுக்கப்படுகிறார் ஆனந்த் (அதர்வா). இன்னொருபக்கம் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிசார்டர் என்ற மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருக்கும் திவ்யா (நிமிஷா சஜயன்). போதைப் பழக்கத்திலிருந்து மீளும் ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் திருமணம் ஆகி அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்கிறது. இருவருக்கும் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் வேறொரு குழந்தையை கொண்டு வந்து, அதர்வாவின் குழந்தையை யாரோ திருடி செல்கிறார்கள்.
மற்ற யாருக்கும் அதுகுறித்து தெரியாத நிலையில், அது தன் குழந்தை இல்லை என்று சரியாக கண்டுபிடித்து சொல்கிறார் திவ்யா. அவரை யாரும் நம்பவில்லை. ஆனால் அதர்வாவிற்கு சந்தேகம் ஏற்பட்டு பிரைவேட் மருத்துவமனையில் ஆக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறார்.
அதில் அவரது குழந்தை இல்லை என்று தெரிய வர, தனது குழந்தையை தேட ஆரம்பிக்கிறார்.
குழந்தை கிடைத்ததா? அவர்களிடம் இருக்கும் குழந்தை யாருடையது போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் பதில் சொல்கிறது ‘டிஎன்ஏ’.
ஒரு மிக முக்கிய பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு அதை விறுவிறுப்பான திரைக்கதையையும், நல்ல நடிகர்களையும் கொண்டு முடிந்த அளவு நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.
படத்தின் பிரச்சினை இரண்டாம் பாதியில், குறிப்பாக படம் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பாணிக்கு மாறும்போது தொடங்குகிறது. புகார் கொடுக்கும் ஹீரோவை விசாரணைக்கு போகும் இடமெல்லாம் போலீஸார் அழைத்துச் செல்வது மட்டுமின்றி, ஹீரோவை விசாரிக்க விட்டு ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எல்லாம் படு அபத்தம். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தொடங்கி, எஸ்ஐ, கான்ஸ்டபிள் வரை ஹீரோ இழுத்த இழுப்புக்கு எல்லாம் வருவதாக காட்டியது நம்பும்படி இல்லை.
ஹீரோவும், போலீஸ்காரரான பாலாஜி சக்திவேலும் ஒரு நரபலியை சென்று தடுப்பதாக வரும் காட்சியெல்லாம் முழுக்க முழுக்க ஹீரோயிசத்துக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரண்டாம் பாதியில், மெயின் வில்லனை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன் என்ற பெயரில் எங்கெங்கோ சுற்றுகிறது திரைக்கதை
ஆனால் படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விட்டதை பிடிக்கும் வகையில் ஒரு நேர்த்தியான க்ளைமாக்ஸை அமைத்துள்ளனர்.
அதர்வாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேர் சொல்லும் கேரக்டர். அதை கச்சிதமாக பற்றிப் பிடித்து ஸ்கோர் செய்துள்ளார்.
நிமிஷா சஜயனின் நடிப்பும் இந்தப் படத்துக்கு இன்னொரு பலம். குறிப்பாக ‘என் குழந்தை எங்கே’ என்று கேட்கும் காட்சி, மாற்றன் பிள்ளையை கொடுத்துவிட்டு கவலைப்படும் காட்சிகளில் எதார்த்த நடிப்பில் மிரட்டியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் கலக்கி இருக்கிறார்.
சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் சேத்தன், விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக், குழந்தைகளை திருடும் பாட்டி உள்ளிட்டோர் நல்ல நடிப்பை தந்துள்ளனர்.
சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கை, குழந்தை இல்லாதவர்களின் ஏக்கம் என பல விஷயங்களை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ்.
ஜிப்ரானின் பின்னணி இசை ok ஒரு சில லாஜிக் மீறல்கள் உள்ளிட்ட குறைகள் இருந்தாலும் குழந்தை கடத்தல், அதன் பின்னணி போன்றவற்றை விறுவிறுப்பாகவும், மிக முக்கியமாக உணர்வுபூர்வமான தருணங்களைக் கொண்டும் சொன்ன வகையில் ‘டிஎன்ஏ’வை குடும்பத்துடன் பார்கலாம்!
