வெள்ளிக்கிழமை, அக்டோபர் 10
Shadow

இட்லி கடை கோடங்கி விமர்சனம் 3.5/5

 

இட்லி கடை கோடங்கி விமர்சனம் 3.5/5

 

தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த ராஜ்கிரண்-கீதாகைலாசம் தம்பதியின் மகன்  தனுஷ். ராஜ்கிரண் அந்த கிராமத்தி ஒரு இட்லிக்கடை நடத்தி வருகிறார். தனுஷும் சிறுவயது முதல் அப்பாவின் இட்லிகடையை பார்த்து வளர்ந்ததால் கேட்ரிங் படித்து விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்.

அங்கு தன் முதலாளி சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவை காதலிக்கிறார். திருமணம் செய்ய நாளும் குறிக்கிறார்கள்.

இந்த சூழலில் கிராமத்தில் இருக்கும் அப்பா ராஜ்கிரண் இறந்து போக அதனால் வெளி நாட்டில் இருந்து கிராமத்துக்கு வருகிறார் தனுஷ். அப்பா இறந்த சில நாட்களிலேயே அம்மாவும் இறந்து போக தனுஷ் மீண்டும் வெளி நாடு போனாரா? அவருக்கு காதலியுடன் கல்யாணம் ஆனதா?

அப்பா ராஜ்கிரண் நடத்தி வந்த இட்லி கடை என்ன ஆனது? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் நடிகர் தனுஷ்.

வெளிநாட்டில் கோட் சூட் போட்டு கம்பீரமாக வரும் தனுஷ், கிராமத்தில் வேட்டி சட்டை, தோளில் துண்டு, நெற்றியில் விபூதி என்று எளிமையாக  வந்து சபாஷ் பெறுகிறார். ஆடவும் செய்கிறார். அடிதடியாக சண்டைக்காட்சியில் அதிரடியும் செய்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் அசத்துகிறார். நடிகராக தனது வேலையை சிறப்பாக செய்திருக்கும் தனுஷ் இயக்குனராக இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். யதார்த்தமாக கதை சொல்கிறேன் என யதார்த்த்தை மீறி திரைக்கதை அமைத்திருக்கிறார்.

தனுஷின் தந்தையாக நடித்திருக்கும் ராஜ்கிரண் பேசும் வசனங்கள் கன கச்சிதம்.

கிராமத்து ஜோடியாக நித்யாமேனன் நடிப்பில் அசத்தினாலும், உருவத்தில் கவனம் செலுத்தாமல் போனால் இனி ஹீரோயின் வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டே அழகாக வந்து அளவாக நடித்து மனசில் நிற்கிறார்.

வெளி நாட்டு பணக்கார தொழிலதிபராக நடித்திருக்கும் சத்யராஜ், தன் மகன் அருண்விஜய் மீது வைத்திருக்கும் பாசத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது அனுபவம் மற்றும் அளவான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

சத்யராஜின் மகனாக நடித்திருக்கும் அருண் விஜய், தனுஷின் வில்லனாக மிரட்டியிருக்கிறார். தனது பழிவாங்கும் உணர்வை அசத்தலான நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், தனுஷுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். சில இடங்களில் தனுஷை மிஞ்சிய நடிப்பால் மிரட்டுகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேஷத்தில் பார்த்திபன் வழக்கமான நக்கல் நையாண்டியுடன் கொஞ்ச நேரமே வந்தாலும் மனசில் நிற்கிறார். அதே போல சமுத்திரக்கனி ஏற்றுக்கொண்ட வேடத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

நாயகன் மட்டும் இன்றி எழுதி இயக்கவும் செய்திருக்கும் தனுஷ், ஒரு இட்லி கடையை வைத்துக் கொண்டு மனிதர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். எத்தனை நாட்டுக்கு சென்று, எவ்வளவு பொருள் தேடினாலும், நம் சொந்த மண் மற்றும் மக்களுடன் பயணிக்கும் போது கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது, என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

அகிம்சையே சிறந்த ஆயுதம், பெற்றவர்களை உடன் இருந்து பார்த்துக் கொள்ளாத பிள்ளைகள் பொறுப்பற்றவர்களே உள்ளிட்ட பல விசயங்களை சொல்லி மக்களின் மனசை தட்டி எழுப்புகிறார்.

மொத்தத்தில், ‘இட்லி கடை’ ரசிக்கலாம். கருத்தை ருசிக்கலாம்!

 

கோடங்கி 3.5/5

 

18 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன