வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

லாக்டவுன் விமர்சனம் 3.5/5

 

 

லாக்டவுன் விமர்சனம் 3.5/5

கற்பனை செய்துகூடப் பார்த்திராத வகையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தை வைத்துக் கொண்டு ஒரு சமுதாயச் சிக்கலைப் பேசியிருக்கும் படம் லாக்டவுன்.

நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன், தோழியின் அழைப்பை ஏற்று ஒரு மதுவிருந்துக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து ஆட்டம் பாட்டம் என மகிழ்கிறார். அந்த மகிழ்ச்சிதான் பின்னால் தனக்கு பெரும் துயருக்குக் கொண்டு செல்லும் பாதையாக மாறும் என்பதை அறியாமல் இருக்கிறார்.

மதுமயக்கத்தில் அவருக்குத் தெரியாமலேயே நடந்த சம்பவத்தால் கர்ப்பம் தரித்து விடுகிறார். பிள்ளைகள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் பெற்றோருக்குத் தெரியாமல் அந்த கர்ப்பத்தை கலைத்துவிட முடிவெடுக்கும் நாளில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுகிறது.

அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? கர்ப்பத்தை கலைத்தாரா? அந்த கர்ப்பத்துக்கு யார் காரணம்? கடைசியில் என்ன ஆனது என்பதை விறுவிறுப்புடன் சொல்ல முயற்சித்திருக்கிறது திரைக்கதை.

அழுமூஞ்சியாக எப்போதும் கிலோ கணக்கில் சோகத்தை முகத்தில் வைத்து காட்சிக்கு காட்சி அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறாரா? நிஜமாக பாத்திக்கப்பட்டவரா? என்பது போல தனது கதாபாத்திரத்தை அழுத்தமாக பதிவு செய்து விடுகிறார். எப்படி கர்ப்பம் தரித்தோம் என்று தெரியாமலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் ஏற்பட்ட இடையூறினாலும் தவித்துப் போகும் காட்சிகளில் எல்லோருடைய பரிதாபத்தையும் சம்பாதித்திக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

அனுபமா பரமேஸ்வரன் பெற்றோராக நடித்திருக்கும் சார்லி, நிரோஷா ஆகியோர் நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் அப்பா-அம்மாவாக ஸ்கோர் அடிக்கிறார்கள்.

என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். பாடல்களைவிட பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் அழுத்த்த்தை உணர்த்தி படபடப்பை அப்படியே ஒலியாக மாற்றி பார்வையாளர்களை பதட்டப்பட வைத்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ஜீவா இந்தக் கதையில் வரும் இளம்பெண்ணின் சிக்கலைப் பற்றி மட்டும் சொல்லாமல், சாதாரண குடும்பங்களில் நடக்கும் யதார்த்த்தை மிக அழகாக வலியோடு சொல்ல முயற்சித்து இருக்கிறார்.

யார் என்றே தெரியாமல் கர்ப்பம் ஆகும் கதை நாயகியின் கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்கிற பெரும் கேள்விக்கு கடைசிவரை விடை சொல்லாமல் இப்படி சிக்கிக்கொள்ளும் இளம்பெண்களின் உளவியல் சிக்கலை காட்சிப்படுத்தி கதை சொன்னவிதம் இயக்குனருக்கு சபாஷ் போட வைக்கிறது.

 

மொத்தத்தில் லாக்டவுன் சமூகத்தில் உண்மைகள் எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

கோடங்கி 3.5/5

105 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன