ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1
Shadow

காந்தி டாக்ஸ் விமர்சனம் 3.5/5

 

 

 

காந்தி டாக்ஸ் விமர்சனம் 3.5/5

பல பக்க காது கிழிக்கும் வசனங்களை அடுக்கடுக்காக பேசி அதை பார்த்து பழகிய சினிமா ரசிகர்களுக்கு வசனங்களே இல்லாமல் காட்சிகளிலும், எழுத்துக்களிலும் திரைக்கதை நகர்த்த முடியும் என்பதை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமா காட்சிப்படுத்தி இருக்கிறது.

1987 ஆம் ஆண்டு கமல்,அமலா,பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் பேசும் படம். படத்தின் பேர்தான் பேசும் படம்… ஆனால் அந்த படத்தின் சிறப்பே அது வசனங்கள் இல்லா பேசாத படம் என்பதுதான். ஆம்,அப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் எதுவும் வசனம் பேசாது.

சுமார் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் 79 ஆம் நினைவு நாளில் காந்தி பேசுகிறார் எனும் பொருளில் காந்தி டாக்ஸ் என்ற படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் சிறப்பும் இது பேசாத படம் என்பதுதான்.

மும்பையில் நடப்பது போன்ற கதை. வறுமையில் வாடும் விஜய்சேதுபதியும் மிகப்பெரும் தொழிலதிபர் அரவிந்த்சாமியும் தான் கதையின் நாயகர்கள்.  நமது கரன்சியில் காந்தி சிரித்துக் கொண்டிருக்கும் ரூபாய் தான் இவர்கள் இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. அது என்ன? விஜய்சேதுபதியின் வறுமை ஒழிந்த்தா? திடீர் திடீர் சோகங்களை சந்திக்கும் அரவிந்தாமியின் சிக்கல் தீர்ந்த்தா? என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறது காந்தி டாக்ஸ்.

விஜய்சேதுபதி எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்து வரவேற்புப் பெற்றுக் கொள்வார். இந்தப் படத்தில் பேசாமலே நடிக்க வேண்டும் என்கிற சவாலை ஏற்றுக் கொண்டு திறம்படச் செய்திருக்கிறார். ஒரு பக்கம் தாய்ப்பாசம், எதிர் வீட்டுக் காதல், வேலை கிடைக்காத அவலம்,  அடுத்த வேளை சாப்பாட்டுக்கே திண்டாடும் வறுமையின் கொடுமை,  ஆகியனவற்றை கண்களாலும் உடல்மொழியாலும் விஜய்சேதுபதி வெளிப்படுத்தியிருக்கும் விதம் சிலிர்ப்பு.

பணம் கொடுக்காமல் பாக்கி வைத்ததால் உணவு கிடைக்காமல் கையில் காலி டிபன் பாக்ஸ்… நாய் சாப்பிடும் சாப்பாட்டை வைத்த கண் வாங்காமல் விஜய்சேதுபதி பார்த்துக் கொண்டிருக்கும் போது பார்க்கிற ஒவ்வொருவரும் பதட்டத்தின் உச்சிக்கே போய் வருவார்கள்… வறுமையின் உச்சப்பட்ச காட்சி அது.

அதே போல தொடர் சோகங்கள், நம்பிக்கை துரோகங்கள், தொழிலில் சரிவு, கைவிட்டு போகும் செல்வாக்கு என உள்ளுக்குள் ஒரு பெரும் எரிமலையை வைத்துக் கொண்டு வெளியில் சிரிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள வேடம் அரவிந்த்சாமிக்கு அந்த கதாபாத்திரம் கன கச்சிதம். .

கதை நாயகியாக நடித்திருக்கும் அதிதிரா அழகு… அதைவிட அழகு அவரது பேசா பாவனைகள். உடல் மொழியிலும், கண்களில் அவர் பேசும் காதல் மொழியிலும் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

பளபளப்பும் மினுமினுப்பும் கூடிய செல்வச்செழிப்பில் புரளும் பணக்கார மும்பையையும், ஒரு வேளை உணவுக்கே போராடும் வறுமை தாண்டவமாடும் மும்பையையும் ஒரு சேரக் காட்சிப்படுத்தும் அரிய வாய்ப்பு. அதைப் பொறுப்பாகச் செய்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத்.

வசனங்கள் இல்லை என்று நினைக்க முடியாத வண்ணம் இசையால் பேசியிருக்கிறார் ஆர்.ரகுமான். கதாபாத்திரங்கள் சொல்ல நினைப்பதை இசை மூலம் பார்வையாளர்களுக்கு புரிய வைத்து வியக்க வைத்திருக்கிறார். படம் நெடுக ஆர்.ரகுமான் ஆதிக்கம்.

திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்கிற புரிதல் சிறிதுமின்றி கத்தித் தீர்த்துக் கொண்டிருக்கும் படங்கள் மத்தியில் காட்சிகளினூடே நாட்டின் அவலங்களைப் பற்றி அனைவரையும் பேசவைத்து சபாஷ் வாங்குகிறார் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர்.

மொத்தத்தில் கரன்சியில் சிரிக்கும் காந்தி இருந்திருந்தால் நிச்சயம் இதைவிட அதிகம் பேசாமல் பேசியிருப்பார்.

 

கோடங்கி 3.5/5

38 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன