
உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடு ஆகியன தமிழ்ப்பண்பாட்டுடன் இயைந்திருக்கின்றன என்பது இப்போது வெளிப்படுகிற செய்தி.இங்கிருந்து சுமார் 5000 கிமீ தொலைவில் இருக்கும் கொரியாவின் பண்பாடுகளுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிற ஆழமான தகவலை அழகான காட்சிமொழியுடன் கலந்து கொடுத்திருக்கும் படம் மேட் இன் கொரியா.
தமிழ்நாட்டின் ஒரு மலைப்பாங்கான ஒரு சிறியகிராமத்தில் வசிக்கும் நாயகி பிரியங்கா மோகனுக்கு, தென் கொரிய கலாச்சாரம் மற்றும் கலைகளின் மீது மிகுந்த ஆர்வம்.அதனால் அங்கு செல்லும் கனவை வளர்த்துக் கொள்கிறார்.ஆனால் வாழ்க்கைச் சூழலில் அது நடக்காமல் போகிறது.திடீரென அவருக்கு கொரியா செல்லும் சூழல் நேர்கிறது.மகிழ்வுடன் செல்லவேண்டிய அந்த நாட்டுக்கு துயருடன் செல்லவேண்டிய நிலை.எதிர்பாராதவிதமாக கொரியாவின் தலைநகரான சியோல் (Seoul) நகரத்திற்குச் செல்கிறார்.தெரியாத மொழி, அறிமுகமில்லாத மனிதர்களிடையே அவர் என்ன செய்கிறார்? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.
மொத்தத் தொடரும் தன் மீதுதான் பயணிக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்பப் பொறுப்புடன் நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.துள்ளித் திரியும் கிராமத்து யுவதி, காதல் மற்றும் அதனால் சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்,கொரியாவில் சந்திக்கும் மனிதர்களைக் கையாளும் கடும்பொறுப்பு ஆகியனவற்றை தன் நடிப்பால் அநாயசமாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
சிறிய வேடங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரியங்காவின் காதலராக நடித்திருக்கும் அவர் தன் வேலையை சரியாக செய்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
பார்க் ஹே-ஜின் (Park Hye‑jin), நோஹூ ஜின் (No Ho‑jin), ஜாங் ஜேஹியான் (Jang Jaehyeon) ஆகிய கொரியா நாட்டு நடிகர், நடிகைகள் மற்றும் பிரியங்காவின் பெற்றோராக நடித்திருக்கும் தமிழ் நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
எந்த இடத்தில் கேமரா வைத்தாலும் அழகாக தெரியும் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தாலும், அந்த களங்களுடன் சேர்த்து கதாபாத்திரங்களையும் அழகாக காட்சிப்படுத்தி முழு படத்தையும், கண்களுக்கான விருந்தாக ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார்.
ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை மென்மையாகவும் பயணித்து, திரைக்கதையில் இருக்கும் உணர்வுப்பூர்வமான விசயங்களை பார்வையாளர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
வேகமும், விறுவிறுப்பும் இன்றி திரைக்கதை பயணித்தாலும், ஊட்டி மலை முகடுகளைத் தொட்டுச் செல்லும் மேகங்கள் மற்றும் உடலைத் தழுவிச் செல்லும் குளிர்ந்த காற்றின் அனுபவம், பனி மழையினால் வெள்ளிச் சிதறல்களாய் ஜொலிக்கும் இரவு மற்றும் கண்கள் கூச செய்யும் பொன்னிற காலை, என கொரியாவை காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை மெய்மறந்து படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.
பிரியங்கா அருள் மோகன் என்ற ஒருவரை சுற்றி கதை நடந்தாலும், அவர் சார்ந்த கதாபாத்திரங்களுக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், அந்த வேடங்களில் பிரபலமானவர்களை நடிக்க வைக்காமல், வளர்ந்து வரும் கலைஞர்களை நடிக்க வைத்து, அந்த கதாபாத்திரங்களை படம் பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்.
வாழ்க்கையில் எதிர்மறையான சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை நேர்மறையான எண்ணத்தோடு எதிர்கொண்டால் அவை நம் வாழ்வை வசந்த காலமாக மாற்றும் என்ற நம்பிக்கையை விதைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.
