
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கான் சிட்டி.இந்தப்படத்தில் இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னாபென் கதாநாயகியாக இணைந்துள்ளார்.இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மூத்தநடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன், படத்தொகுப்பு : அருள் மோசஸ்,இசை: ஷான் ரோல்டன்,கலை இயக்கம்: ராஜ் கமல்,உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்,சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு,மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றுள்ளது.
நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்தப்படம் உருவாகியுள்ளது.நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை,அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது.பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என்ற வித்தியாசமான கற்பனை,குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து படத்திற்கு தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மேலும், தமிழ்த்திரையுலகில் தனித்துவமான இசைக்காக பெரும் இரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.டீசரில் இருந்த இசை, காட்சியமைப்பு, கதையின் மையக்கரு ஆகியவை இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் எனப்படும் இணையதள ஒளிபரப்பு உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே நடந்துள்ள இந்த ஒப்பந்தம்,இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.இது,படத்தின் உள்ளடக்கத்தின் மீது மட்டுமல்ல, அதன் நடிப்பு, தொழில்நுட்பத் தரத்திலும், வணிக வெற்றியில் இருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் மொத்தச் செலவு சுமார் பத்து கோடி என்று சொல்லப்படுகிறது.இப்போது இணையதள ஒளிபரப்பு உரிமைக்குக் கிடைத்திருக்கும் தொகை சுமார் ஏழரை கோடி என்று சொல்கிறார்கள்.
வளரும் நாயகன் நடிப்பில் உருவான ஒருபடம்,வெளியீட்டுக்கு முன்பே ஒரு வியாபாரத்திலேயே போட்ட முதலீட்டில் முக்கால்பங்கை எடுத்துவிட்டது படக்குழு. இன்னும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, பாடல் உரிமை, வெளிநாட்டு உரிமை, வெளிமாநில உரிமை இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு திரையரங்க உரிமை ஆகிய விற்பனைகள் இருக்கின்றன.
இதனால், இந்தப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் இலாபம் சம்பாதிக்கும் என்பதால் இப்படத்தின் நாயகன் அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
