திங்கட்கிழமை, மே 13
Shadow

சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்ட பெரும் இன்னல்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தமிழக அரசுக்கும், சி.பி.எஸ்.இ. நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இருந்து 3,685 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டி இருந்தது என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளதாக ஒரு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வு மையங்களை தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஏன் அமைக்க முடியவில்லை என்ற காரணத்தை சி.பி.எஸ்.இ. மற்றும் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர் ஒவ்வொருவருக்கும் ரெயில் கட்டணம் மற்றும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவ-மாணவியர் வேறு மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் தன்னுடைய மகனுடன் சென்ற தந்தை ஒருவர் கேரளாவில் மாரடைப்பால் இறந்துள்ளார். இது மிகவும் தீவிரமான மனித உரிமை மீறலாக கருதப்படுகிறது.
தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ-மாணவியர் எந்த இன்னல்களுக்கும், வசதி குறைபாட்டுக்கும் ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமையாகும். தமிழக அரசு மற்றும் சி.பி.எஸ்.இ. நிறுவனம் தமிழ்நாட்டுக்குள்ளேயே தேர்வு மையங்களை அமைக்க தவறி உள்ளன. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
எனவே, நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவ-மாணவியர் தொலைதூர இடங்களுக்கு பயணிக்க நேரிட்டது ஏன்? என்பது குறித்து விரிவான அறிக்கையை சி.பி.எஸ்.இ. நிறுவனத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் ஆகியோர் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்தும் இவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
176 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன