சனிக்கிழமை, மே 18
Shadow

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னையில் மிதமான மழை இருந்தாலும் ஒருசில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

பலத்த காற்று வீசுவதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும் மீனவர்கள் தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தெற்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்பு இல்லை.

 

364 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன