வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

பூமராங் விமர்சனம்

தீ விபத்து ஒன்றில் சிக்கி தனது முகத்தை முழுவதும் இழந்து அகோரமாக காட்சியளிக்கிறார் சிவா. சிவா இருக்கும் அதே மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு கோமாவில் இருக்கிறார் சக்தி (அதர்வா). முக மாற்று அறுவைசிகிச்சை மூலமாக அதர்வாவின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர். சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு திரும்புகின்றார்  சிவா. இவரின் அழகை கண்டு இவர் மீது காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். வாழ்க்கை இப்படியாக செல்ல, சிவாவை கொல்ல நினைக்கின்றனர் சிலர்.

அதன் பிறகுதான் தெரிகிறது, தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிக்கு காரணம் என்று. அந்த சக்தி யார் என்று தெரிந்து கொள்ள அவரின் கிராமத்திற்கு செல்கிறார் சிவா.

ப்ளாஷ்பேக் தொடர்கிறது. சக்தி (அதர்வா), ஆர் ஜே பாலாஜி, இந்துஜா மூவரும் நண்பர்கள். நன்கு படித்துமுடித்துவிட்டு ஒரு ஐ டி கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். திடீரென்று ஒருநாள் இவர்களோடு சேர்த்து சுமார் நூறு பேரையும் வேலையில் இருந்து தூக்கிவிடுகிறது அந்த ஐ டி நிறுவனம்.

வேலையிழந்ததால் தனது கிராமத்திற்கு சென்று விவசாயம் பார்க்க எண்ணுகிறார் அதர்வா. அங்கு சென்றால், குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது அந்த கிராமம்.

நதிநீர் இணைப்பு திட்டத்தை எடுத்து கிராமத்தின் முன் வைக்கிறார் அதர்வா. நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த முடிந்ததா ..?? இல்லையா…?? இதெயெல்லாம் அறிந்து கொண்ட அதர்வாவின் முகத்தில் திரியும் சிவாவால் என்ன செய்ய முடிந்தது என்பது க்ளைமேக்ஸ்.

சிவாவாகவும் சக்தியாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார் அதர்வா. சக்தி கதாபாத்திரம் மிகவும் மிரட்டலான, எதற்கு துணிந்த கதாபாத்திரம் என்பதால், அதற்கு முழுமையான உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறார்.

பெரிதான கதாபாத்திரம் இல்லை என்றாலும், தனக்கான கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் வரும் இந்துஜா, ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் மாதிரியாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் ’ஓகே’ ரேஞ்ச் தான்.

ஆர் ஜே பாலாஜி ஆங்காங்கே அடிக்கும் சில அரசியல், விவசாயம் பற்றியான செய்திகள் கைதட்ட வைக்கின்றன. அவரின் நடிப்பும் சூப்பர்.

இசையமைப்பாளர் ரதனின் இசையில் ’முகையாழி’ பாடல் கேட்கும் ரகம். பின்னனி இசை ஓகே தான். பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவு கலர்புல். அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கிராமத்தை காட்டும் காட்சிகள் அழகு.

முதல் பாதி எதற்காக செல்கிறது என்று தெரியாமல் இருந்த கதை, இரண்டாம் பாதியில் அனல் பறக்க செல்கிறது. நதிநீர் இணைப்பை முக்கிய கருத்தோடு சொல்லியிருப்பதால் அனைவரும் உற்று பார்க்க வேண்டிய படமாகவும் இது உள்ளது.

தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக தண்ணீர் உருவெடுக்க வெகுகாலம் இல்லை என்பதால், நதீநீர் இணைப்பை மக்கள் முன் கொண்டு சென்றால் மட்டுமே அதற்கான விழிப்புணர்வு கிடைக்கும் என்பதில் இயக்குனருக்கு இருந்த கடமைப்பற்றை பாராட்டாமல் இருக்க முடியாது.

பூமராங் – நதீநீர் இணைப்பின் முக்கியத்துவத்தின் முதற்புள்ளி..

382 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன