வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் எம்.பி.ஆன துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன்… கல்வெட்டு சர்ச்சை…

 

தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோயில் அருகே உள்ளது காசி ஶ்ரீஅன்னபூரணி கோயில். தனியாருக்குச் சொந்தமான இக்கோயிலில் கடந்த 16-ம் தேதி வைக்கப்பட்ட கல்வெட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் எனக் குறிப்பிட்டு கல்வெட்டு வைக்கப்பட்டதே அதற்கு காரணம்.

இந்த விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியதை அடுத்து, அவசர அவசரமாக கல்வெட்டு மறைக்கப்பட்டது.

இந்த நிலையில், அக்கோயிலின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

“குச்சனூர் காசி ஶ்ரீஅன்னபூரணி கோயில் கல்வெட்டு விவகாரம் நேற்று என் கவனத்துக்கு வந்தது.

இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறானது. என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிக்கை வெளியிட்டார் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மச்சானும், தேனி மாவட்ட அ.தி.மு.க தேர்தல் முகவருமான வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையில், கட்சியினர் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தனர்.

இதை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்த சின்னமனூர் காவல்துறையினர், வேல்முருகனைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த வேல்முருகன் யார்?

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

தமிழக காவல்துறையில் பணியாற்றிவந்த வேல்முருகன், அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசி. ஜெயலலிதாவை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவதூறாகப் பேசிவிட்டார் எனக் கூறி, அவரைக் கைது செய்ய வேண்டும் என காவலர் சீருடையுடன் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தியவர்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவர் குணமடைய வேண்டும் எனக் கூறி காவலர் சீருடையுடன் மொட்டை அடித்தவர்.

இப்படி தொடர் சர்ச்சை விவகாரங்களில் சிக்கிய வேல்முருகனை, கட்டாயப் பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது தமிழக காவல்துறை.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க-வின் முழு நேர கட்சிப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், தன் தந்தைக்குச் சொந்தமான காசி ஶ்ரீஅன்னபூரணி கோயிலில் கல்வெட்டு வைத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

எதிர்க்கட்சிகளை வம்புக்கு இழுப்பதா?

கல்வெட்டு சர்ச்சை தொடர்பாக வேல்முருகன் மீது நம்பிக்கைத் துரோகம் செய்தல், போலி ஆவணங்களை மக்கள் பார்வைக்கு வைத்து மோசடி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

முன்னதாக, “இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி, இதற்கும் ரவீந்திரநாத்குமாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

திட்டமிட்டே ரவீந்திரநாத்குமாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர் எதிர்கட்சியினர்” என்று கூறுகிறார்கள் அ.தி.மு.க விசுவாசிகள்.

446 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன