திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

நடு வானில் பறந்த விமானத்தை தரையிறங்கி ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் பயணம் ரத்து..!

 

பறந்து கொண்டிருந்த விமானத்தை அவசரமாக தரையிறக்கி முன்னாள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள்..!

இந்தியாவில் உள் நாட்டு விமான சேவையில் அதிகம் பங்கு வகித்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தற்போது கடும் கடன் நெருக்கடியில் உள்ளது.

விமான பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வருவாய் இல்லாமல் பெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் பதவியை நரேஷ் கோயல் திடீரென ராஜினாமா செய்தார்.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டதன் பேரில் நரேஷ் கோயல் ராஜினாமா செய்தார் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் நரேஷ் கோயலும் அவர் மனைவி அனிதா கோயலும் மும்பையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல விமானம் ஏறினார்கள்.

விமானம் ரன்வேயில் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த விமானத்தை உடனடியாக மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு மீண்டும் விமானம் தரையிறங்கிய காரணம் அப்போதைக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

விமானம் தரையிறங்கியதும் அந்த விமானத்தில் பயணம் செய்த நரேஷ் கோயல் மற்றும் அவர் மனைவியின் விமான பயணத்தை விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்தனர்.

பின்னர் விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

பறந்து சென்ற விமானத்தை கீழிறக்கி ஜெட் ஏர்வேஸ் நிறுவன முன்னாள் தலைவரின் பயணத்தை ஏன் ரத்து செய்தார்கள் என்ற எந்த விவரமும் அறிவிக்கப்படவில்லை.

அதே நேரம் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல எந்த தடையும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.

அப்படியிருக்க இந்த பயணத்தை ரத்து செய்தது ஏன் ? ஏற்கனவே பொதுத்துறை வங்கிகளிடம் பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கிக் கொண்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்த பல பிரபல தொழிலதிபர்கள் வரிசையில் நரேஷ் கோயல் பெயரும் இடம் பெறக்கூடாது என்பதற்காகவும், பிரதமர் மோடியின் கடந்த கால ஆட்சியில் தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது.

மீண்டும் மோடி வெற்றி பெற்று இன்னும் பிரதமராக கூட பதவி ஏற்கவில்லை. அதற்குள் மீண்டும் பொதுத்துறை வங்கியில் பல ஆயிரம் கடன் பெற்றவர் வெளி நாட்டுக்கு தப்பி ஓடினார் என்ற சிக்கலுக்குள் வர விரும்பாதது காரணமாக இருக்கலாம்.

608 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன