
எம்பி தேர்தல்களில் தோல்வி தழுவி இருந்தாலும் சுமார் 4 சதவீதம் ஓட்டு வாங்கி அனைவர் பார்வையில் சிக்கியவர் கமல்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கமல் பேசும்போது, நாம் நல்ல வாக்கு சதவீதம் பெற்று இருக்கிறோம். ஆனால் டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் வாக்குகளை மிகக் குறைவாகப் பெற்றுள்ளோம்.
அதற்கான காரணம் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். தேர்தல்தான் முடிந்துவிட்டதே… இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். தினந்தோறும் மக்கள் பணி செய்யுங்கள்.
மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்கு சென்று மக்கள் குறையைக் கேட்டு செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள். என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவேன், இரவு 12 மணிக்கு அழைத்தாலும் வருவேன், அதுபோல் நீங்களும் மக்கள் பணிக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.
இந்த தேர்தலில் நமக்குக் கிடைத்தது பெரிய வெற்றி தான். நம்பிக்கையுடன் மக்கள் பணியைத் தொடருங்கள். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வாய்ப்புகள் உண்டு என்றும் கூறினார்.
இந்த தேர்தலில் கடுமையாக வேலை செய்தது யார், ஓய்வு எடுத்தது யார், வேலை செய்யாமல் ஏமாற்றியது யார் என்பது எல்லாம் எனக்கு தெரியும். அவர்கள் பெயர்களை குறிப்பிட நான் விரும்பவில்லை.
இனியும் இப்படி இருக்கக்கூடாது. என்னுடைய ஒரு முகத்தைத்தான் பார்த்திருக்கிறீர்கள். இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்ததில்லை. அது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் முகம். நமது பொறுப்பு கூடியிருக்கிறது.
14 மாதத்தில் நம்மை மக்கள் இவ்வளவு வாக்குகள் கொடுத்து ஆதரித்திருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் நாமும் நடக்க வேண்டும். இல்லை என்றால் கட்சியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டேன் என்று எச்சரித்தார்.
தலைமை நிர்வாகிகளுக்கு மட்டும் விருந்தா? என்று என்று யாரும் கேள்வி கேட்க வேண்டாம்.
விரைவில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் வர இருக்கிறேன். அப்போது ஆலோசனை கூட்டமும் விருந்தும் நடைபெறும்.
நிர்வாகிகள் பசியை மட்டும் அல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரும் பசி காத்திருக்கிறது. அதை தீர்க்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இனி என் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். தீவிரமாக கட்சி பணியாற்றுபவர்களுக்கு பரிசும் ஏமாற்றுபவர்களுக்கு தண்டனையும் உறுதி.
மக்கள் நம் மீது வைத்த நம்பிக்கையை சரியாக பயன்படுத்தி அந்த நம்பிக்கையை அதிகமாக்க வேண்டும் இவ்வாறு கமல் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.
