வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களை ஈடுபடுத்தி சிக்கிக் கொண்ட சுவாமி சங்கரதாஸ் அணி … ஆடியோ வெளியாகி பரபரப்பு..!

 

 

நடிகர் சங்க தேர்தலில் சங்கத்தில் இல்லாத உறுப்பினர்கள், தன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பேராசிரியர்களை தேர்த பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஐசரி கணேஷ் மீது பாண்டவர் அணி ஆதாரங்களுடன் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஜூன் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணியின் சார்பில் சுவாமி சங்கரதாஸ் அணியும், கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் – விஷால் கூட்டணியின் பாண்டவர் அணி சின்ன மாற்றங்களோடு தேர்தலில் நிற்கிறது.

ஒவ்வொரு அணியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எதையும் கூற முடியாததால் கட்டிடம் தாமதமானதற்கு இவர்கள் தான் காரணம் என்று சுவாமி சங்கரதாஸ் அணி பிரசாரத்தில் ஈடுபடுகிறது.

இதற்கிடையில் நடிகர் சங்க நில மோசடியில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ராதாரவி ஏற்கனவே நயன்தாராவை தரக்குறைவான வகையில் பேசி திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இப்போது நில மோசடி விவகாரத்தில் தன் மீதான பிடி இறுகுவதை தெரிந்து திடீரென அதிமுகவில் இணைந்து வெளியே வந்ததும், நடிகர் சங்க தேர்தலே நடக்காது என்று பேசி பரபரப்பை தேடினார்.

இது ஒரு பக்கம் இருக்க சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் பாக்யராஜ் “நாடக நடிகர்களுக்கு பணம் கொடுத்து தான் ஓட்டு வாங்கப் போகிறோம்” என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அடுத்ததாக தேர்தலுக்கு பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என போலீஸ் தரப்பில் முட்டுக்கட்டை எழுந்தது.

அடுத்ததாக பதிவுத்துறை தலைவர் திடீரென பழைய முடிந்து போன புகார்களை மனு தேதி குறிப்பிடாமல் விசாரணைக்கு அனுப்பி வைத்து தேர்தலை தள்ளி வைக்க திட்டங்கள் நடந்தது.

இவை எல்லாவற்றிலும் நடுநிலையுடன் தேர்தல் அதிகாரி பத்மநாபன் ஏற்கனவே நடிகர் சங்க விதிமுறைகள் அனைத்தையும் சரிபார்த்து விதிமீறல் எதுவும் இல்லை என்றே தேர்தல் தேதியை அறிவித்தார்.

பாண்டவர் அணி வெளியூர்களில் உள்ள நாடக நடிகர்களை நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறது.

அதே போல சுவாமி சங்கரதாஸ் அணியும் தன் சார்பில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறது.

இப்போது அதில் தான் சிக்கல்…

ஐசரி கணேஷ் நடத்தும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குழு குழுவாக நடிகர் சங்க உறுப்பினர்கள் வீடுகளுக்கு சென்று ஐசரி கணேஷ் அணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க… நடிகர் சங்க உறுப்பினர் அல்லாத அதிலும் குறிப்பாக மாணவர்களை எப்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தலாம் என ஐசரி கணேஷ் மீது புகார் எழும்பி உள்ளது.

இது குறித்து ஆதாரத்தோடு தேர்தல் அதிகாரி, கல்வித்துறை நிர்வாகத்தில் புகார் அளிக்கப்படும் என தெரிகிறது.

இத்தனை சர்ச்சையில் ஐசரி கணேஷ் நடத்தும் கல்லூரியில் ஒரு துறை தலைவர் என குறிப்பிட்டு நடிகர் சங்க தேர்தலில் ஐசரி கணேஷ் அணிக்கு ஓட்டு போடுங்கள் என ஒரு ஆடியோ வெளியாகி பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது

இந்த ஆதாரங்கள் உண்மையாகும் பட்சத்தில் ஐசரி கணேஷ் நடத்தும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்திற்கே சிக்கலை ஏற்படுத்தும்.

– கோடங்கி

439 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன