வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

நாடோடி காதல் தேறுமா “ஜிப்ஸி” விமர்சனம்

 

காஷ்மீர் போரில் பெற்றவர்களை பறி கொடுத்து அனாதையாக நிற்கும் ஜிப்ஸியை திருவிழாக்களில் குதிரை வைத்து வேடிக்கை காட்டும் ஒருவர் வளர்க்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் இறந்து போக குதிரையோடு நாடோடியாக ஊர் ஊராக போகிறார். பாட்டுப்பாடுகிறார்.

அப்படி குதிரைக்கார தெருப்பாடகனாக மாறிய ஜிப்ஸி நாகூர் வருகிறார். அங்கே இஸ்லாமிய மத கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்து பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணுக்கு விடிந்தால் திருமணம் என்ற சூழலில் அந்த பெண்ணோடு ஊரைவிட்டே ஓடி வேறொரு ஊரில் இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்கிறார் ஜிப்ஸி.
மனைவி கர்ப்பிணி ஆக இருக்கும் போது அந்த ஊரில் மதக்கலவரம் ஏற்படுகிறது. அதில் மனைவியை பிரியும் ஜிப்ஸியை போலீஸ் பிடித்து செல்கிறது. கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா இதுதான் ஜிப்ஸி கதை.

புரட்சிகரமான தெருப்பாடகன் என்று ஜிப்ஸியான ஜீவாவை அடையாளம் காட்டும் இயக்குனர் ராஜு முருகன் அதற்காக கதையிலும், திரைக்கதையிலும் பலம் சேர்க்காமல் போவதால் ஜிப்ஸி கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் போகிறது.

அத்தனை கட்டுப்பாடுகள் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து பார்த்த உடன் ஒரு நாடோடியான குதிரைக்காரரை நம்பி ஒரு பெண் வெளியே வருகிறார் என்பதை ஏற்க முடியவில்லை. செயற்கைத்தனமாக இருக்கிறது. ஹீரோயின் நடாஷா சிங் வஹிதா என்ற பெயரில் தன் கேரக்டரை தக்க வைத்து கொள்கிறார். ஆனால் அழுத்தமான கதாபாத்திரத்துக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை இயக்குநர் ராஜு முருகன் தராமல் வீணடித்ததால் வஹீதா கதாபாத்திரம் கவனம் ஈர்க்கவில்லை.

பல காட்சிகள் கருப்பு வெள்ளையில் வருகிறது. காரணம் சென்சார் அப்படி மாற்ற சொல்லிவிட்டார்கள் என்கிறார்கள். இதுவும் படத்தின் மீதான ஆர்வத்தை மட்டுப்படுத்துகிறது.

இஸ்லாமிய மக்களை அடித்து நொறுக்கி கலவரம் செய்து வெட்டிக் கொல்லும் நபர் கடைசியில் கையிழந்து அவர் சார்ந்த அமைப்பின் ஆட்களாளேயே வெட்டப்பட்டார் எனபது மட்டுமே சபாஷ் சொல்ல வைக்கிறது.

அதே போல ஒரே மேடையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தன் மனைவியையும், கலவரத்துக்கு காரணமானவனையும் நிறுத்தப்போவதாக அறிவிப்பு செய்து நடத்தும் கூத்தெல்லாம் சினிமாத்தனம்.

பாப் பாடகி என்று ஒரு பெண் அடிக்கடி ராப் இசை என்ற பேரில் அடிக்கிற கூத்து எல்லாம் எரிச்சல் ரகம்.

இந்த கலவர கேப்பில் ஒரு பெண்ணை பலர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்கிறார்கள். அந்த சம்பவமும் பலமில்லாத திரைக்கதையின் ஓட்டத்தால் அழுத்தமில்லாமல் போகிறது.

ஒரு கட்டத்தில் நேரடி தமிழ் படமா இல்லை டப்பிங் படமா என யோசிக்கும் அளவுக்கு திரைக்கதை காட்சியமைப்பு இருக்கிறது.

இயக்குனர் ராஜூ முருகனிடம் இன்னும் அதிகம் எதிர்பார்த்து ரசிகனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

அதே போல சர்ச் வாசலில் ஜீவா ஜிப்ஸியாக அடிக்கும் நையாண்டி கமெண்ட் எல்லாம் எரிச்சல் ரகம்

மொத்தத்தில் நாடோடிகள் எப்படி ஒரு இடத்தில் தங்க மாட்டார்களோ அதே போல ஜிப்ஸி ரசிகர் மனசில் நிற்க மாட்டான்!

– கோடங்கி

925 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன