
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
முதல்வராக உள்ள கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது ஆட்சி பறிபோகும் நிலைக்கு காரணமாகி உள்ளது.
ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் வெளியேறி, பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு வந்தார்கள்.
இதனால் ம.பி. அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிராதித்யா சிந்தியா கடிதம் அனுப்பினார்.
ஆனால், அதற்கு முன்பாகவே அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் இன்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ஆளுநருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். 19 பேர் ஒட்டுமொத்தமாக விலகியதால், காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியை தக்கவைக்கும் மெஜாரட்டியை காங்கிரஸ் இழப்பதால் கமல் நாத் ஆட்சி கவிழ்கிறது.
பாஜக ஆதரவுடன்
ஜோதிராதித்யா சிந்தியா ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

