
விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரானா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் கொரானாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கொரானா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரானா நிவாரணத் தொகையான ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு விட்டது.
அரசு செய்த ஆர்டரிடன் பேரில் தமிழகத்திற்கு 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வந்துள்ளது.
1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் கருவிகள் இன்னும் வரவில்லை.
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக்கூடாது.

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துச்செல்ல தடையில்லை, சர்க்கரை ஆலைகள் இயங்கவும் தடையில்லை.
தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.
மருத்துவம் சார்ந்த கொரானா விஷயத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா?. மருத்துவ வல்லுநர்கள் கூறும் ஆலோசனையை அரசு ஏற்கும். எதிர்க்கட்சிகள் எந்த வகையில் ஆலோசனை கூற முடியும்.
இக்கட்டான நேரத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சியினர் முனைகிறார்கள். குறை சொல்ல இது நேரம் இல்லை என்றார்.
