வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7
Shadow

உள்ளாடை போல இனி மாஸ்க் கட்டாயம் அணியனுமாம் – சொல்கிறார் ராதாகிருஷ்ணன்

 

 

சென்னையில் எடுக்கப்பட்டு வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புகள் குறித்து கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் ராயபுரம் மண்டலத்தில் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். கொரானா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏனென்றால் கடந்த 9 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வட சென்னை பகுதிகளில் கொரானா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் 19 கூடுதல் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளன. அதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வந்துள்ளது.

தற்போது பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும்.

சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு இதுபோன்று அதிக எண்ணிக்கையில் தான் முடிவுகள் வரும். சென்னையில் தான் அதிகளவில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

கொரானா என்னும் கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிராக நாம் நடத்தக்கூடிய போரில், மனித குலமே தன்னைத்தானே சிப்பாய்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். தொண்டை மற்றும் மூக்கு வழியாகதான் நோய் மிக வேகமாகப் பரவுகிறது. பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும், தங்களை முதலில் பாதுகாக்க வேண்டும்

உள்ளாடைகள் அணிவதைப் போல அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரானா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. சென்னையில் 170 வார்டுகளில் 30-க்கும் குறைவான பாதிப்புகளே காணப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் 2 வார்டுகளில் மட்டுமே உள்ளது. இந்த பகுதிகளில் பரிசோதனை செய்யும்போது முடிவு அதிக எண்ணிக்கையில் வரும்.

சென்னையில் 30 சதவீத மக்கள் முக கவசம் அணிவதே இல்லை. சென்னையில் இறப்பு விகிதம் 0.68 என குறைந்துள்ளது. இந்த இறப்பு விகிதத்தை பூஜ்ஜியம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு விட்டது.

சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரம் கோயம்பேடு மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி வியாபாரம் அனைத்து வியாபாரிகளையும் சோதனை என்ற பெயரில் பகுதி பகுதியாக திருமண மண்டபங்களில் அடைத்து வைத்து எந்த அடிப்படை வசதிகளும் தராமல் இருப்பதாக புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

642 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன