
தமிழ் சினிமாவின் சுப்பீரியர் ஆபீசர் ஆகலாம் என ஆந்திராவில் போய் அமர்ந்து கொண்ட பெப்சி தலைவர் செல்வமணியின் ஒரு அறிவிப்பு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் புகைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
கொரானா ஊரடங்கால் முடக்கி வைக்கப்பட்ட தமிழ் திரையுலகில் மீண்டும் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியாமல் இருக்கிறது.
இந்த சூழலில் அரசு பல்வேறு வகையான தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக திரையுலகில் போஸ்ட் புரொடக்சன் எனப்படும் ஷூட்டிங் பிந்தைய பணிகள் செய்ய அனுமதி தர தயாரிப்பாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை ஏற்று சில கட்டுப்பாடுகளுடன் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது.
இந்த சூழலில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் செய்வதற்கு தயாராகும் நிறுவனங்கள் அதன் விவரங்களை பெப்சிக்கு அனுப்பி உரிய அனுமதி பெற்று பணிகளை தொடங்க வேண்டும் என பெப்சி தலைவர் செல்வமணி ஒரு குரல் பதிவில் தெரிவித்து இருந்தார்.
தமிழக அரசு அனுமதி அளித்த உத்தரவில் பெப்சியில் போய் பெயர்களை கொடுத்து அனுமதி வாங்க வேண்டும் என எந்த வழிகாட்டுதலும் இல்லை.
ஆனால், தமிழ் சினிமாவின் தலைமை அமைப்பாக இருந்த தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது நிர்வாகிகள் இல்லாமல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே போல நடிகர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் இல்லாமல் கோர்ட்டு, வழக்கு என சிக்கலில் உள்ளது.
இதன் காரணமாக இப்போது சினிமா தொழிலாளர்கள் உள்ள சங்கங்களின் கூட்டமைப்பான பெப்சி தான் தமிழ் சினிமாவின் சுப்பீரியர் அமைப்பாக தன்னை காட்டிக்கொண்டு பல்வேறு வகையான அறிவிப்பை செய்து வருகிறது.
கொரானா நிவாரண நிதி உதவி தொடங்கி பல்வேறு வகையான விஷயங்களை தயாரிப்பாளர்கள் திரைப்பிரபலங்கள் பலரிடமும் வசூலித்து வழங்கி வருகிறது.
பெப்சியின் தலைவராக உள்ள இயக்குனர் செல்வமணி இந்த கொரானா ஊரடங்கு இடர் நேரத்தில் தன்னை தமிழ் சினிமாவின் சுப்பீரியர் தலைவராக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறாரா என்ற குற்றச்சாட்டுகள் தமிழ் திரையுலகில் பலமாக எழுந்துள்ளது.
காரணம், கொரானா நிவாரண நிதி உதவியாகட்டும், பொருள் உதவியாகட்டும் இவை எல்லாம் யாரோ பலர் கொடுப்பது. அதை தொழிலாளர்களுக்கு கொடுக்கும் போது தேவை இல்லாமல் “உதவி செய்த பெப்சி தலைவர் செல்வமணிக்கு நன்றி” என உதவி பெறுபவர்களிடம் பதில் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டு.
அடுத்தது உதவி செய்வது எல்லாவற்றையும் போட்டோ எடுத்து விளம்பரப்படுத்தியது.
அடுத்தது, தொழிலாளர்கள் நலனுக்கு நிதி கொடுங்கள் என ஒரு முறைக்கு இரு முறை கோரிக்கை வைத்த பின்னரும் வந்த நிதி உதவி எல்லா தொழிலாளர்களுக்கும் பிரித்து கொடுக்க பத்தாது என்று கூறிய செல்வமணி திடீரென முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் பெப்சி நிதி அளிக்கும் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு செயற்குழு ஒப்புதல் பெறப்பட்டதா அல்லது செல்வமணியே தன்னிச்சையாக அறிவித்தாரா என்ற கேள்வியும் எழுந்தது.

அடுத்தது திரைப்பட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி செய்வதற்காக பிரபல நடிகர்கள் அமிதாப், பிரபு மற்றும் கல்யாண் ஜூவல்லரி, சோனி நிறுவனம் கொடுத்த பிக்பஜார் கூப்பன்களை வழங்கும் டோக்கனில் உதவி கொடுத்தவர்கள் புகைப்படங்களை விட தன் புகைப்படத்தை பெருசாக போட்டு செல்வமணி விளம்பரம் தேடிக் கொண்டது.
இவை எல்லாவற்றையும் விட தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு கொடுத்த அனுமதியை தனது தலைமையிலான பெப்சி வாங்கி கொடுத்தது போல செல்வமணி வெளியிட்ட குரல் பதிவு ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் சுப்பீரியர் தலைமையாக தன்னை காட்டிக் கொள்ள முயற்சிக்கும் செல்வமணியின் அறிவிப்புக்கு பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
போஸ்ட் புரொடக்சன் செய்ய தயாரிப்பாளர்கள் அரசின் வழிகாட்டுதலை மட்டும் பின்பற்றினால் போதும் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என ஆவேசமாக குரல் பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசோ அல்லது பட தயாரிப்பாளர்கள் யாரும் சொல்லாமலேயே சினிமாவின் அடுத்த பணிகளை தொடங்க தனது தலைமையை தேடி வரவேண்டும் என்ற செல்வமணியின் குரல் பதிவு தமிழ் சினிமாவில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
– கோடங்கி
