
அமெரிக்காவில் கருப்பின வாலிபர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கருப்பாக மாறிய டிவிட்டர் குருவி!
அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கடந்த 25ஆம் தேதி கருப்பின வாலிபர் ஒருவரை விசாரணை என்ற பெயரில் போலீசார் அவரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தில் அழுத்தி நெறித்து கொலை செய்தார்.
அது சம்மந்தமான வீடியோ உலகெங்கும் பரவி கடும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் பெற்றது.
இதனையடுத்து கருப்பின வாலிபரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் .
இதையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீசாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த போலீஸ்காரரின் மனைவி அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் கணவரின் செயல் தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும், அதனால் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் அமெரிக்க வரலாற்றில் இல்லாத வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிபர் டிரம்ப் குடும்பத்துடன் பதுங்கு அறையில் தஞ்சம் அடைந்தார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த போராட்டக்காரர்கள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘கலைந்து செல்லவில்லை என்றால் சுடப்படுவீர்கள்’ என்று டிவீட் செய்ய, அமெரிக்க அதிபராக இருந்தாலும் அவர் வெளியிட்ட பதிவு தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என டிவிட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.
மேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தங்கள் முகப்புப் புகைப்படத்தையும், குருவி லோகோவையும் கருப்பு நிறத்தில் மாற்றி தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளது.
அதே போல யூடியூப் டிவிட்டர் கணக்கு பகுதியும் கருப்பாக மாறி தனது ஆதரவையும் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் எப்போதும் கூகுள் துணை நிற்கும் என சுந்தர்பிச்சை கூறியிருந்தது குறிப்பிடதக்கது.
அமெரிக்காவில் தொடர்ந்து பரவி வரும் கொரானாவை கண்டு அஞ்சாமல் கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

