
கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!
கொரானா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க குறைந்தது ஓராண்டு ஆகும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் லீ சி யென்லூங் பேசியதாவது:-
கொரானா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகலாம்.
நாம் கொரானா வைரசுடன் நீண்ட நாட்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது காசநோய் போன்ற ஆபத்தான தொற்று நோயுடன் கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருவதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
கொரானா தொற்று மனித இனம் நீண்ட காலத்துக்கு பிறகு சந்தித்து இருக்கும் மிகப்பெரிய ஆபத்தான நெருக்கடியாகும்.
கொரானா வைரஸ் நெருக்கடியில் இருந்து சிங்கப்பூர் இன்னும் வலிமையான மேம்பட்ட நாடாக மீண்டும் வரும். கிருமி தொற்றுக்கு முன் இருந்த உலகளாவிய பொருளாதாரத்துக்கு சிங்கப்பூர் விரைவில் திரும்ப போவதில்லை. இதனால் சில தொழில்துறைகள் நிரந்தரமாக மாற்றப்படும். பல தொழில்துறைகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
