சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

பெண் பிரதமரின் மதி நுட்பத்தால் கொரானாவை ஒழித்த முதல் நாடு நியூசிலாந்து!

 

பெண் பிரதமரின் மதி நுட்பத்தால் கொரானாவை ஒழித்த முதல் நாடு நியூசிலாந்து!

உலகையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முடக்கிப் போட்டிருக்கும் கொடிய கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என ஒவ்வொரு நாடும் வித விதமான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

அப்படி இருந்தும் கொரானா போவேனா பார் உலக வல்லரசு நாடுகளுக்கு சவால் விட்டு வருகிறது.

ஆண்கள் ஆளுகிற நாடுகளை விட பெண்கள் ஆளுகிற நாடுகளில் வைரஸ் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது உலக அளவில் கொரானாவை முற்றிலும் ஒழித்த முதல் நாடு என்ற பெருமையை பெண் பிரதமர் ஆளும் நியூசிலாந்து பெற்றுள்ளது.

ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரானா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை வெறும் 22 மட்டுமே. மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஆக்லாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் 48 மணி நேரம் எந்த அறிகுறியும் இன்றி, குணமான நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை ஆக்லாந்து பிராந்திய பொது சுகாதார துறை உறுதி செய்தது.

இந்த நாட்டில் கொரானா கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் நுழைந்தது. ஆனால் ஆரம்பத்திலேயே அந்த நாடு உஷாராக இருந்து விட்டது. நமது நாட்டைப் போலவே மார்ச் 25-ந் தேதி அங்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. நான்கு நிலை எச்சரிக்கை அமைப்பை அந்த நாடு ஏற்படுத்தியது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

5 வாரங்களுக்கு பின்னர் மூன்றாம் நிலை எச்சரிக்கை அமைப்பு நடை முறைப்படுத்தப்பட்டது. உணவு விடுதிகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டன. அத்தியாவசியமற்ற சில வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரானா வைரஸ் தொற்று குறைந்து கொண்டே வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த மாத மத்தியில் 2-ம் நிலை எச்சரிக்கை அமைப்பு நடை முறைப்படுத்தப்பட்டது. லெவல்-1 என்று சொல்லப்படுகிற இயல்பு நிலைக்கு ஜூன் 22-ந் தேதி திரும்பி விடலாம் என நியூசிலாந்து அரசு முடிவு செய்து வைத்திருந்தது.

ஆனால் அது இப்போது முன்கூட்டியே இன்று முதல் அமலுக்கு வருகிறது. காரணம், கடந்த 17 நாட்களாக புதிதாக ஒருவருக்கு கூட அங்கு கொரானா வைரஸ் தொற்று கிடையாது.

இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப் போகிறார்கள். இனி அங்கு தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கத் தேவையில்லை. திருமணம், விழாக்கள், இறுதிச் சடங்குகள் என பொதுமக்கள் கூடுவதற்கு தடை ஏதும் கிடையாது. பொது போக்குவரத்து சாதனங்கள் இயங்கும். கட்டுப்பாடுகள் கிடையாது. நியூசிலாந்துக்கு வெளிநாட்டினர் யார் வந்தாலும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தொடரும். அதே நேரத்தில் அந்த நாட்டின் எல்லைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

கொரானாவில் இருந்து முற்றிலும் விடுபட்ட நியூசிலாந்து நாட்டில் அரசும் வெளிப்படையாக இருந்தது மக்களும் அரசின் உத்தரவுகளை பின்பற்றினார்கள்.
ஆனால் இங்கே அரசும் வெறும் வாய்ச்சவடாலில் கைத் தட்டச் சொல்லியும், விளக்கு ஏற்றச் சொல்லியும், ஆஸ்பத்திரிகள் மீது போர் விமானங்கள் மூலமாக பூ தூவியும் வைரஸ் ஒழிப்புக்கு கொஞ்சமும் சம்மந்தம்மில்லாத முட்டாள்தனமான வேலைகளை செய்து விளம்பரம் தேடிக் கொண்டதுதான் மிச்சம்.

642 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன