
கொரானாவால் இழந்த பொருளாதாரத்தை சீராக்கும் புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்!
கொரானா தாக்கத்தால் பிற நாடுகளை போலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடு குவைத்.
அதனால், சொந்த நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக்குழு வரைவு இந்த வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
குவைத் முழுதும் உள்ள மக்கள் தொகை 43 லட்சம்.
அதில் வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் இந்தியர்கள்தான் அதிகம். குவைத் அரசின் இந்த புதிய சட்டம் இந்தியர்களின் எண்ணிக்கையை 15 சதவீதமாக குறைக்க வகை செய்கிறது. அதன்படி 14 லட்சமாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆறு முதல் 7 லட்சமாக குறைக்கப்படும் போது, மீதமுள்ள 7 முதல் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்திலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
குவைத் போலவே பல வளைகுடா நாடுகளிலும் வெளிநாட்டு பணியாளர்கள் கணிசமான அளவு வெளியேற்றப்பட்டால் இந்தியாவில் அன்னிய செலாவணி பெருமளவு பாதிப்படையும்.
