
சீனாவில் தொடங்கிய கொரோனா பரவலில் இருந்தே இன்னமும் உலக நாடுகள் மீளாத நிலையில் இங்கிலாந்தில் உருவான புதிய வகை உருமாறிய கொரோனா காரணமாக பிப்ரவரி மாதம் வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக 2வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த செய்திக்குறிப்பில் முந்தைய கொரோனா பரவலை காட்டிலும் மிக வேகமாகவும், அதி தீவிரமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் உருமாறிய கொரோனா பரவி வருவதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும்.மக்கள் தங்கள் பணிகளை வீடுகளில் இருந்தே மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். உணவகங்களில் டைனிங்கிற்கு அனுமதி கிடையாது.
இந்த வரிசையில் தற்போது ஸ்காட்லாந்து, லெபனானிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
