
பிரபல நடிகர்களே நலிந்த நடிகர்களுக்கு உதவுங்களேன்
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி. எஸ்.முருகன் முன்னணி நடிக, நடிகைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, ‘முன்னணி நடிக, நடிகைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
முன்னணி நடிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்… இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அன்றாட சம்பளத்துக்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தான். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நான் என்னால் முடிந்த அளவுக்கு தமிழ்நாடு முழுக்க இருக்கும் உறுப்பினர்களுக்கு நேரடியாகவும் அந்த அந்த பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் மூலமாகவும் உதவிகள் செய்துவருகிறேன். ஆனால் இந்த விஷயத்தில் தங்களது கரங்களும் கோர்த்தால் அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்று நம்புகிறேன்.
அதனால் தான் இந்த கடிதத்தை அனைத்து நடிக, நடிகைகளுக்கும் ஒரு வேண்டுகோளாக எழுதுகிறேன். ஃபெஃப்சி அமைப்புக்கு தாங்கள் உதவிகள் செய்து வருகிறீர்கள். மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஃபெஃப்சியில் நமது சங்கம் அங்கம் வகிக்கவில்லை. அங்கம் வகித்து இருந்தால் நமது உறுப்பினர்களுக்கும் அந்த உதவிகள் கிடைத்திருக்கும். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களும் பயனடையும் வகையில் தனியாக உதவிகள் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி அவர்கள் வீடுகளில் அடுப்பு எரிவதை உறுதிபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன். அவர்களது வாழ்வாதாரம் காக்க கையேந்துகிறேன்… உதவிக்கரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்… நன்றி’
