கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ்பாதிப்பால் நடுத்தர வயதை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா முதல் அலையை விட 2-வது அலையில் ஏற்பட்ட இதுபோன்ற உயிரிழப்புகளால் பல குடும்பங்களில் பெற்றோர்களை இழந்து குழந்தைகள் தவித்து வருகிறார்கள்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம், வைப்பு தொகை நிலுவையில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும், உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும் இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிவாரண உதவிகள் தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு நிதித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளனர்.
இதன்படி தமிழக அரசு வழங்கும் ரூ.5 லட்சம் வைப்பு தொகை மின் நிதி நிறுவனத்தில் வைப்பீட்டு தொகையாக நிலுவையில் வைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியலை கலெக்டர்கள் தயார் செய்து வருகின்றனர். படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

