செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

கோவை மாவட்டத்தில் மெல்ல, மெல்ல குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடக்கூடிய வீதிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கோவை கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் 5,6,7-வது வீதிகள், ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை(ராயல்நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஒப்பணக்கார பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மற்றும் பல்வேறு கடைகளிலும் பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் அந்த பகுதியில் எப்போது மக்கள் நடமாட்டம் இருக்கும். வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதுடன், நெரிசலும் ஏற்படும்.

இன்று அந்த பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகள் மக்கள் நடமாட்டம் எதுவுமின்றி வெறிச்சோடி கிடந்தது. வாகன போக்குவரத்து சற்று குறைந்து காணப்பட்டது.

குறிப்பிட்ட 12 முக்கிய வீதிகளை தவிர மாநகரில் மற்ற இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் 5 மணி வரை கடைகள் அனைத்தும் இன்று செயல்பட்டன.

மாநகரில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பஸ் போக்குவரத்து இயங்கியது. மக்களும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்சில் சென்று வந்தனர்.

இதேபோல் கோவையில் கிராஸ்கட் ரோடு 2-வது, 3-வது வீதி டாஸ்மாக் கடைகள், மற்றும் 5-வது வீதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள், 100 அடி சாலையில் உள்ள 2 கடைகள், துடியலூர் சந்திப்பில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள், புருக் பீல்டு மால் கட்டிடத்தில் டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்பட்டு இருந்தது. மதுபிரியர்கள் சிலர் கடை மூடப்பட்டது தெரியாமல் அந்த கடைகளுக்கு வந்தனர். கடை பூட்டி கிடப்பதை பார்த்ததும் மற்ற பகுதி கடைகளை நோக்கி படையெடுத்தனர்.

அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி. பூங்கா, காந்தி பார்க் , பாரதி பூங்கா உள்பட அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன. மக்கள் வருவதை தடுக்கும் வகையில் பூங்கா முன்பு மற்றும் பூங்கா செல்லக்கூடிய சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

454 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன