வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது.

அதன்படி, நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு விமானத்தில், இந்திய தூதரக ஊழியர்கள் உள்பட 40 பேர் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மற்றொரு விமானப்படை விமானத்தில் மீதியுள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைத்துவர திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய தூதரகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதிக்குள் தலிபான்கள் நுழைந்து விட்டனர். தூதரகத்தில் இருந்து காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

இதனால், இந்திய தூதரக ஊழியர்களை விமான நிலையத்துக்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்காவிடம் இந்தியா சார்பில் முறையிடப்பட்டது. அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, தலிபான்கள் வழிவிட்டனர்.

இந்த பணிகள் நடந்ததால், நேற்று முன்தினம் முழுவதும் விமானப்படை விமானம் காபூல் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

நேற்று அந்த விமானத்தில், ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன், இந்திய தூதரக ஊழியர்கள், தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத்திய எல்லை படையினர், சாதாரண இந்தியர்கள் உள்பட 150 பேர் ஏற்றப்பட்டனர்.

அவர்களில், ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள், செய்தி சேகரிக்க சென்ற டெல்லி பத்திரிகையாளர்கள் 2 பேர் ஆகியோரும் அடங்குவர்.

150 பேருடன் நேற்று காலையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்டது. பாகிஸ்தான் வான்பகுதியை தவிர்த்து, ஈரான் வான்பகுதி வழியாக திரும்பியது.

டெல்லி செல்லும் வழியில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள விமானப்படை தளத்தில் விமானம் தரை இறங்கியது. விமானத்தில் இருந்து இறங்கிய தூதர் உள்ளிட்டவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். ஜாம்நகர் மேயரும் வரவேற்றார். 150 பேருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

அந்த விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. அதன்பிறகு, பிற்பகல் 3½ மணியளவில், விமானம் 150 பேருடன் டெல்லிக்கு புறப்பட்டது. மாலை 5 மணியளவில், டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமான தளத்தில் தரை இறங்கியது.

இந்தியா வந்து சேர்ந்த இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் கூறியதாவது:-

இந்தியாவுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் நிலைமை குழப்பமாக இருக்கிறது. அங்கு இன்னும் இந்தியர்கள் பலர் சிக்கி தவிக்கிறார்கள்.

சில இந்தியர்கள், இந்திய தூதரகத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அந்தவகையில் 5 அல்லது 6 பேரை எனக்கு தெரியும். மொத்தத்தில், இன்னும் 40 அல்லது 50 இந்தியர்கள் அங்கு இருப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்கள் தொலைவான இடங்களில் இருப்பதால், அவர்களை வரவழைப்பதில் சிரமம் இருந்தது.

கடந்த 3 நாட்களில் 2 கட்டங்களாக 192 இந்தியர்கள் மீ்ட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தூதர் மற்றும் தூதரக ஊழியர்களை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிந்தம் பக்ஷி கூறியுள்ளார்.

இதற்கிடையே, கேரளாவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் காபூலில் சிக்கி தவிப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் தங்களை மீட்டுச்செல்ல ஏற்பாடு செய்யுமாறு வெளிநாட்டுவாழ் கேரள மக்களுக்கான துறையிடம் செல்போனில் முறையிட்டனர்.

அதன்பேரில், அவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கேரள அரசின் முதன்மை செயலாளர் இளங்கோவன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், மூடப்பட்ட காபூல் விமான நிலையம், வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படுகிறது. இதை விமான நிலைய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ‘அல்ஜசீரா’ டி.வி. கூறியது.

இதற்கிடையே, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 4 நாள் பயணமாக தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

காபூல் விமான நிலையத்தில், விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு அவர் வலியுறுத்தினார். இந்தியர்களை வெளியேற்றுவது பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் விவாதித்ததாக தெரிகிறது.

160 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன