
கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் தினசரி பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது.
தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தில் இருந்து நாள்தோறும் படுவேகமாக உயர்ந்தது.
முதல் 2 அலைகளை விட 6 மடங்கு வேகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே நேரம் நாடு முழுவதும் மக்களுக்கு 160 கோடி டோசுக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது.
மேலும் நோயின் தீவிரமும் குறைவாகவே காணப்பட்டதால் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே குணம் அடைந்தனர்.
இதனால் 3-ம் அலை குறுகிய காலத்தில் உச்சம் அடைந்தது.
கடந்த மாதம் 21-ந்தேதி 3.47 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானதே இந்த அலையின் உச்சமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர்.
அதன் பிறகு தினசரி பாதிப்பு நாள்தோறும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.
தொடக்கத்தில் எந்த அளவுக்கு வேகமாக தினசரி பாதிப்பு உயர்ந்ததோ, அதே அளவு வேகத்தில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது.
அந்த வகையில் நேற்றைய பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
கடந்த மாதம் 6-ந்தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 90 ஆயிரமாக இருந்தது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்றைய பாதிப்பு மீண்டும் 1 லட்சத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 14 ஆக உயர்ந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9.7 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது அதற்கு முந்தைய வார பாதிப்புடன் (17.6 லட்சம்) ஒப்பிடுகையில் சுமார் 45 சதவீதம் குறைவு ஆகும்.
நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 7.42-ல் இருந்து 7.25 சதவீதம் ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 11.20-ல் இருந்து 9.18 சதவீதம் ஆகவும் குறைந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 26,729, மகாராஷ்டிராவில் 9,666, கர்நாடகாவில் 8,425, தமிழ்நாட்டில் 6,120 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 515 பேர்உள்பட நாடு முழுவதும் மேலும் 895 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் மகாராஷ்டிராவில் 66, கர்நாடகாவில் 47, தமிழ்நாட்டில் 26, மேற்கு வங்கத்தில் 34, ஒடிசாவில் 23, குஜராத்தில் 19, டெல்லியில் 14, உத்தரபிரதேசத்தில் 15, பஞ்சாபில் 28 பேர் நேற்று இறந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 5,02,874 ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரேநாளில் 1,99,054 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 6 லட்சத்து 60 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,08,938 ஆக குறைந்துள்ளது.
இது நேற்று முன்தினத்தை விட 1,16,073 குறைவாகும்.
நாடு முழுவதும் இதுவரை 169 கோடியே 63 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 14,70,053 டோஸ்கள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 11,56,363 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மொத்த பரிசோதனை எண்ணிக்கை 74.15 கோடியாக உயர்ந்துள்ளது.
505 Views