செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

தூத்துக்குடி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் – ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவருக்கு எதிராக கோஷமிட்டதாக கைது செய்யப்பட்ட சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி, தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநரும்,

அப்போதைய தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும், அங்கிருந்த சோபியா என்ற மாணவி, பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

இதனால், தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, சோபியா மீது விமான நிலைய அதிகாரியிடம் தமிழிசை புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் சோபியாவை கைது செய்தனர்

இந்த வழக்கை தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் எடுத்து விசாரணை நடத்தியது. அதில், சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், விசாரணை என்ற பெயரில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பல மணிநேரம் சோபியாவை காக்க வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆணையம்,

இந்த குற்றத்திற்காக, சோபியாவின் தந்தைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை, எதிர் மனுதாரராக குற்றம் சாட்டப்பட்ட புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலை இடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயையும் மற்ற காவல் துறையை சேர்ந்த 6 நபர்கள் இடம் தலா 25 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகையை ஒரு மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டுமெனவும் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்

187 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன