
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து சாரை சாரையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு குழந்தைகளுடன் ஏராளமான உக்ரேனியர்கள் சென்றனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலந்தின் மெடிகா எல்லைக்கு சென்ற மக்களை அங்கு காத்திருந்த உறவினர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர்.
போருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உதவ ஏராளமானோர் நாடு திரும்பி வருகின்றனர்.
போலந்தில் வாழ உக்ரேனியர்கள் சிலர் ரயில் மூலம் லீவ் மற்றும் ஒடேசா நகரங்களுக்கு வந்தடைந்தனர்.
உக்ரைனில் 2.65 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், அதில் 80,000 பேருக்கு 3 மாதங்களில் குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளது.
உக்ரைனை விட்டு இடம் பெயரும் கர்ப்பிணிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் உறுதியளித்துள்ளது
உக்ரைனிலிருந்து இதுவரை 8.36 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதில் 4.54 லட்சம் பேர் போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஹங்கேரிக்கு 1.16 லட்சம் பேரும், ஸ்லோவாக்கியாவிற்கு 67,000 பேரும்; மால்டோவாவிற்கு 65,000 பேரும் இடம் பெயர்ந்துள்ளனர்.
உக்ரைனை தாக்கி வரும் ரஷ்யாவிற்கு 43,000 பேர் சென்றுள்ளனர். ருமேனியாவில் 38,000 பேரும், பெலாரசில் 350 பேரும் தஞ்சமடைந்துள்ளனர். மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு 52,000 பேர் அகதிகளாக சென்றுள்ளனர்

