திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”

 

நடிகர்கள்: ஆதி, ஆகான்ஷா சிங், முனீஸ்காந்த், மைம் கோபி, பிரகாஷ் ராஜ். கிரிஷா குரூப், நாசர், பிரம்மாஜி; இசை: இளையராஜா; ஒளிப்பதிவு: பிரவீண்குமார்; இயக்கம்: பிருத்வி ஆதித்யா. வெளியீடு: சோனி லைவ்.

 

ஒரு படம் பார்த்து முடித்தபின் படம் பார்த்தவர்கள் எழுந்து கிளாப் அடித்தால் அது வெற்றிப்படம். அல்லது ரசிக்கக்கூடிய வித்தியாசமான படம். இந்த கிளாப் படமும் அந்த வரிசையில் சேர தகுதியான படம்தான்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ விளையாட்டு தொடர்பான படங்கள் வந்திருக்கிறது. ஹிட் ஆகியிருக்கிறது. கவனம் பெறாமலேயே போயிருக்கிறது.

ஆனால், பிரித்விக் இயக்கி இருக்கும் இந்த கிளாப் புதுசாய் ஒரு விவகாரத்தை மெல்ல தொட்டிருக்கிறது. நாட்டுக்காக சர்வதேச அரங்கில் பதக்கம் வெல்ல சிறந்த வீரர்களாக மட்டும் இருந்தால் போதாது. விளையாட்டு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மிகச்சரியாக அதே நேரம்,பொட்டில் அடித்தார் போல சொல்லி இருப்பது படத்துக்கு பலம்.

தமிழ் சினிமாவில் நீண்டகாலத்திற்கு பின் இப்படி ஒரு Feel Good Movie வந்துள்ளது. சாதனை வலிகளை வேதனையோடு வெறியோடு சொல்லி அறிமுக இயக்குனர் பிரித்விக் தனக்கென தனிப் பாதை போட்டிருக்கிறார். அவருக்கு கைகோர்த்து அந்த உணர்வுகளை அப்படியே காட்சிப்படுத்தி பல இடங்களில் சபாஷ் வாங்குகிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார்.

ஓட்டப்பந்தயத்தில் சாதிக்கத்துணிந்த ஹீரோ ஒரு விபத்தில் காலை இழக்கிறார். குடும்ப சூழலால் சாதிக்க வேண்டிய ஒரு பெண் வீட்டுக்குள் முடங்குகிறார். அவரை வைத்து காலை இழந்த ஹீரோ செய்த சாதனை என்ன?, என்ன எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார் வெற்றி பெற்றாரா இல்லையா? ஒரு வரிக் கதைக்குள் பல கதைகளின் தொடக்கத்தை வைத்து திரைக்கதையாக ஓட வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஹீரோ ஆதியின் மனைவியாக வரும் அகன்ஷாசிங் அதிகம் பேசாமல் இருந்தாலும் அவர் கண்கள் பல இடங்களில் வலுவாக பேசி அசத்துகிறது. காதலிலும், பிரிவிலும், கடைசி கிளைமாக்சிலும் அகன்ஷா நடிப்புக்கு சபாஷ் போடலாம். ஓட்டப்பந்தைய வீராங்கனையாக வரும் கிரிஷா இன்னும் ஒருபடி மேலே போய் நிஜ வீராங்கனையாகவே வலம் வருகிறார்.

இந்த படத்துக்கு இளையராஜா இசை என பார்த்த் ஞாபகம்… ஆனால் பாடலிலும் சரி, பின்னணி இசையிலும் சரி ராஜாவை காணோம் என்பது வருத்தமான உண்மை.

ஆதிக்கு இந்த படம் தனி பெயரை பெற்றுத்தரும். காலை இழந்த பிறகு phantom limb பிரச்சனையால் தவிக்கும் காட்சிகளில் ஆதி ஸ்கோர் செய்கிறார்.  வழக்கமான வில்லத்தனத்தை புதுசாய் செய்கிறார் நாசர்.

விளையாட்டில் இப்படி எல்லாமா அரசிய இருக்கும் என அதிர்ச்சி அடைய வைக்கும் ஷாக் விஷயங்களையும் வசனம் மூலம் பேசியிருக்கிறார் இயக்குனர்.

ஆங்கில பத்திரிகை செய்தியாளராக கார்த்திக் வரும்  ராமானுஜம் கதாபாத்திரம் தனி கவனம் பெறுகிறது.

மொத்தத்தில் கிளாப் பார்த்து முடித்தால் நிச்சயம் கிளாப்ஸ்(கைத்தட்டல்) அடிக்கலாம்!

 

கோடங்கி

மதிப்பீடு : 3.5/5

409 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன