
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல வேக்னர் என்னும் கூலிப்படையை தங்கள் நாட்டுக்குள் ரஷ்ய அதிபர் புடின் அனுப்பியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன.
மரியுபோல் நகரை தொடர்ந்து ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு வருகின்றன. அந்நகரின் 80 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல ரஷ்யா முயன்றுவருவதாக உக்ரைன் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் வேக்னர் (Wagner group ) கூலிப்படையினர் ஜெலன்ஸ்கியை கொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புடின் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் வேக்னர் கூலிப்படையினரை உக்ரைன் படைகள் அகற்றுவார்கள் என்றும் அந்நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
