ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

இறுகப்பற்று ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

 

 

இறுகப்பற்று ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

காலங்கள் மாறிவிட்ட இவ்வுலகில் காதல் எவ்வளவு எளிது என்ற நிலையை அடைந்து விட்டதோ, அதேபோல் பிரேக் அப், விவாகரத்து உள்ளிட்ட சம்பவங்களும் சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. வார்த்தைப்போர் தொடங்கி உடல் ரீதியான தாக்குதல், தம்பதிகளுக்குள் சண்டையே வராமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுபவர்களின் செய்தியை நாம் தினமும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மிக அழகாக விடை சொல்லியிருக்கிறது “இறுகப்பற்று”..!

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா ஐயப்பன் ஆகியோர் வெவ்வேறு வாழ்க்கை நிலையை வாழும் தம்பதியினர். திருமண பிரிவு பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராக வரும் ஷ்ரத்தாவுடன் கணவர் விக்ரம் பிரபுவுக்கு சண்டையே வந்தது இல்லை. அதையே ஒரு ஏக்கமாக கொண்டு வாழும் நிலையில் இருவருக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது.

அதற்கு எதிர்மாறாக மனைவி அபர்ணதியின் உடல் எடை தொடங்கி வாய் துர்நாற்றம் வரை அவருடன் நெருக்கமாக இருக்க விடாமல் பல பிரச்சினைகள் காரணமாக அமைவதால் விவாகரத்து கேட்கும் விதார்த், தான் சொல்வது தான் சரி என கூறி மனைவி சானியா ஐயப்பனை மட்டமாக மதிக்கும் ஸ்ரீ ஆகிய 3 பேரை சுற்றித்தான் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இந்த 3 தம்பதியினர் உறவில் அதிகப்படியான விரிசல் ஏற்படுகிறது. அது எதனால்? இத்தகைய பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு? என்பதை கவிதை பாணியில் மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.

உறவுகளுக்கிடையே ஏற்படும் உளவியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட இந்தப் படம் முழுக்க, இனிமை நிறைந்த உணர்வுகளுடன் இருப்பது சிறப்பு. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த் என அனைவரும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மனோபாலா நடிப்பு மிகச்சிறப்பு

இறுகப்பற்று படத்தை கவிதைப் போல அழகாக அடுக்கி கதை சொல்லியிருக்கிறார் யுவராஜ் தயாளன். தம்பதியினர் இடையேயான பிரச்சினைகளை திரையில் காட்டி அதற்கு தீர்வு சொல்லும் போது பலருக்குள் இறுகப்பற்று படம் நிச்சயம் மாற்றத்தை நிகழ்த்தும் என்பதே உண்மை. நிஜத்தில் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என லாஜிக் பார்க்காமல், கொஞ்சம் யோசித்து பார்த்தால் வாழ்க்கையில் நாம் செய்யும் சின்ன தவறுகள் பெரிய மகிழ்ச்சியை சீர்குலைக்கும் என்ற உண்மை புரியும்.

ஈகோ மட்டும் கணவன் -மனைவி , காதலன் – காதலிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தாது. என்னென்ன காரணங்கள் இங்கு பிரிவுக்கான ஆணிவேராக உள்ளது என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. வசனங்களும் லைக்ஸ் போட வைக்கிறது.  விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இடையேயான இடைவேளைக்கு முன்பான உரையாடல் உள்ளிட்ட பல காட்சிகள் ரசித்து கைதட்ட வைக்கிறது

மொத்தத்தில் இறுகப்பற்று இப்போதைய இயந்திர வாழ்க்கைக்கு தேவையான படம்.

 

கோடங்கி 3.5/5

 

 

96 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன