சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

மனம் கனமக்கும் “ரணம்” விமர்சனம் 3/5

 

மனம் கனமக்கும் “ரணம்” விமர்சனம் 3/5

இயக்கம்: ஷெரீப்

நடிகர்கள்: வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன்

ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா

இசை: அரோல் கரோலி

தயாரிப்பு: மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ்

அடையாளம் காணமுடியாத சிதைந்து போன உடலை வைத்து, இறந்தது யார் என்று வரைபடமாக வரையும் திறமை படைத்தவர் நாயகன் வைபவ். இப்படி பல வழக்குகளை போலீஸ் துணையோடு முடித்து வைப்பவர்.

ஒரு முறை தனது காதல் மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால், தனது மனைவியை பறிகொடுத்து விடுகிறார். வைபவுக்கும், 2 வருட நினைவுகள் அழிந்து போகிறது.

இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியில் வாழும் வைபவ் கையில் மீண்டும் ஒரு வழக்கு வருகிறது.

வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல் என கருகிய நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போக, வழக்கு சூடு பிடிக்கிறது.

வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப். கிடைத்த உடல் பாகங்கள் அனைத்தும் வேறு வேறு உடல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என கண்டறிகின்றனர்.

இறுதியில் இறந்தவர்கள் யார்.? இந்த வழக்கிற்கும் வைபவிற்கும் என்ன சம்மந்தம்.?? நந்திதா எப்படி இந்த வழக்கிற்குள் வருகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் வைபவிற்கு இது சற்று வித்தியாசமான கதாபாத்திரம் தான்.

எமோஷன்ஸ், காதல், அப்பாவித்தனம் என பல கோணங்களில் வழக்கமான தனது நடிப்பின் திறமையை இப்படத்திலும் கொண்டு வந்திருக்கிறார் வைபவ்.

மிடுக்கான இன்ஸ்பெக்டராக வந்து வழக்கை தனது உடல் மொழியில் விசாரிக்கும் தன்யா ஹோப்பிற்கு தமிழ் சினிமா அடுத்தடுத்து கைகொடுக்கும் .

பத்து 12 வயது குழந்தைக்கு அம்மா என்றவுடன் ஜகா வாங்கும் நாயகிகளுக்கு மத்தியில், கதையின் கருவை நன்றாக புரிந்து கொண்டு அக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நந்திதாவுக்கு சபாஷ் போடலாம்.

குழந்தையை பறிகொடுத்தவுடன் கதறி அழும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தையும், பழி வாங்கும் காட்சிகளில் ஆவேசத்தையும் காட்டி அட போட வைத்து விடுகிறார்.

அதுமட்டுமல்லாமல், சுரேஷ் சக்ரவர்த்தி, டார்லிங் மதன் என நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒரு சில காட்சிகள் என்றாலும் அதை சரியாகவும் அளவாகவும் பயன்படுத்தி மனதில் பதிகிறார் நாயகி சரஸ் மேனன். மகளாக நடித்த ப்ரனிதி நடிப்பில் மிளிர்கிறார்.

அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக நிற்கிறது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு படத்தில் கூடுதல் கவனம் பெறுகிறது.

வழக்கமான க்ரைம் த்ரில்லர் தானே என்று இப்படத்தை கடந்து செல்ல முடியாது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதால் அனைவரும் உற்று நோக்கும்படியாக இதை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

யாரும் சொல்லத்தயங்கிய குரூர விஷயத்தை மைய கருவாக எடுத்த நோக்கத்திற்காக இயக்குனரை பாராட்டிடலாம்.

மொத்தத்தில் ரணம் மனதை ஆக்குது கனம்.

மதிப்பீடு 3/5

75 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன