ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 15
Shadow

விஜய்க்கு ஒய் பாதுகாப்பு கரிசனமா? கடிவாளமா?

 

 

 

விஜய்க்கு ஒய் பாதுகாப்பு கரிசனமா? கடிவாளமா?

 

நடிகராக இருக்கும் விஜய் இப்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்.

2026 ஆட்சியை பிடிப்போம் என்ற முழக்கத்தோடு செயல்படும் விஜய் யாருடைய தூண்டுதலாலேயே அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று ஒரு சாராரும், பாஜகவின் பி டீம் இவர் என ஒரு சாராரும், திமுகவுக்கு மாற்று விஜய் தான் என அவர் தரப்பும் சொல்லி வருகிறார்கள்.

இந்த சூழலில் பனையூர் பங்களாவை விட்டு பெரும்பாலும் வெளியே அரசியல் செய்யாத விஜய் அந்த இட்த்தில் இருந்தே அரசியல் செய்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளானாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் தன் விருப்பம் போல செயல்படுகிறார்.

சமீபத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை தனது பனையூர் பங்களாவுக்கு வரவைத்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது.

காரணம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றியது இதே பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தான்.

ஆனால், திமுக பல ஆண்டுகளாக அரசியலில் வெற்றி தோல்விகளை சந்தித்த கட்சி என்பதும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் என்பதும் அவர்களுக்கு இருந்த தொண்டர்கள் பலமும், பிரசாந்த் கிஷோரின் அரசியல் நகர்வுகளும் கூடுதல் பலமாக கை கொடுத்த்தாலும், திமுகவுக்கு மாற்றாக பலமான எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் இல்லாத்தும் பெரும் வசதியாக மாறி திமுக வெற்றிக்கு வழி வகுத்தது.

ஆனால் விஜய் நாடறிந்த நடிகராக இருந்தாலும் அரசியலில் குழந்தை என்பதும், அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொண்டர்களாக மாறாமல் அரசியல் புரிதல் இல்லாமல் சோஷியல் மீடியாவில் வார்த்தை சண்டை போடுகிற விசிலடிச்சான் குஞ்சுகளாக இருப்பதும் விஜய்க்கு பெரும் பின்னடைவுதான்.

 

இந்த சூழலில் ஒன்றிய பாஜக அரசின் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி விஜய்க்கு 8 பேர் கொண்ட ஒய் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற தகவல் தமிழக அரசியலில் இன்னும் அனலை ஏற்ப்படுத்தி உள்ளது.

காரணம், கேட்காமலேயே விஜய்க்கு ஒன்றிய அரசு ஏன் இந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதோடு இந்த பாதுகாப்புக்காக மாதா மாதம் சுமார் 12 லட்சம் ரூபாய் செலவாகுமாம்.

தமிழ் நாடு போன்ற அமைதி நிலவும் மாநிலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத ஒரு நடிகருக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை ஒரு அரசு தாமாக முன்வந்து செலவு செய்கிறது என்றால் ஆதாயம் இல்லாமலா? என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியாது.

ஆனால் யாரோ சிலர் சமூக ஊடகங்களில் விஜய் மீது முட்டை வீசுவோம் என பேசியதால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாக காரணம் சொல்வோரும் உண்டு.

அதே நேரம் பாஜக இந்த பாதுகாப்பை தந்துவிஜய்யை தன் வசப்படுத்திக் கொண்ட்தாகவும், விஜய் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம் என்றும் பேசப்படுகிறது.

எது எப்படியோ ஒய் பாதுகாப்பு விஜய் மீதான கரிசனத்தாலா? அல்லது பாஜகவின் கடிவாளமா? என்பது போகப்போக தெரிந்து விடும். அதுவரை அரசியல் நகர்வை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது தான்!

கோடங்கி

 

109 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன