ரெட்ரோ விமர்சனம் 3.5/5
சூர்யாவின் ஆக்ஷன் அதிரடி வரிசையில் இணைந்த ரெட்ரோ. அப்ப கதை???
தூத்துக்குடியில் வளர்ப்பு தாய் மற்றும் வளர்ப்பு தந்தையின் உதவியோடு வளர்கிறார் சூர்யா. வளர்ப்பு தாய் இறந்துவிட, வளர்ப்பு தந்தையான ஜோஜூ ஜார்ஜ் சூர்யாவை ஒரு அடியாளாக வளர்த்து வருகிறார்.
பல அடிதடி, கொலைகளை செய்த சூர்யா, பூஜா ஹெக்டேவை சந்தித்ததும் காதல் கொள்ள, அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். அடிதடியை முழுவதுமாக விட்டதால் சூர்யாவை மணமுடிக்க சம்மதம் தெரிவிக்கிறார் பூஜா. திருமணநாளன்று, வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த கடத்தக் பொருளை மறைத்து வைத்து அதனை ஜோஜூவிடம் தர மறுக்கிறார் சூர்யா. இனி கடத்தை செய்ய மாட்டேன் என்றும் கூறி விடுகிறார் சூர்யா.
இதனால், இருவருக்கும் கடும் மோதல் நிலவ, ஜோஜூவின் கையை வெட்டி, ஜெயிலுக்குள் சென்று விடுகிறார் சூர்யா. சூர்யா மீது கோபம் கொண்டு ஊரை விட்டு வெளியேறி விடுகிறார் பூஜா.
நான்கு ஆண்டுகள் தேடுதலுக்குப் பிறகு, பூஜா அந்தமானில் இருப்பதாக தகவல் கிடைக்க, அவரைக் காண ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார் சூர்யா.
அந்தமானில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களை அடிமையாக வைத்துள்ளனர் நாசரும், அவர் மகன் விதுவும். ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கும் சூர்யாவிற்கும் என்ன சம்மந்தம்.? சூர்யா அவர்களுக்காக என்ன செய்தார்.? சூர்யா – பூஜா ஹெக்டே இருவரும் திருமணம் செய்து கொணடார்களா.?? என்பதே ரெட்ரோ படத்தின் மீதிக் கதை
சூர்யா மீதே மொத்த கதையும் பயணமாகிறது. படத்தின் ஆரம்பத்தில் சூர்யாவின் இண்ட்ரோ காட்சி, ஆக்ஷன் காட்சி என படத்தில் சூர்யாவின் ரசிகர்களுக்குத் தேவையான அனைத்தும் படத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் காட்சிகளில் அதிகப்படியான உழைப்பு தெரிகிறது. அந்த உழைப்பிற்கான பலனும் படத்தில் நன்றாகவே எதிரொலித்திருக்கிறது.
பூஜா ஹெக்டே ஒவ்வொரு காட்சிகளிலும் அழகில் ஜொலித்திருக்கிறார். அமைதியை விரும்பும் ஒரு மருத்துவராக தனது ரோலை சரியாக செய்திருக்கிறார். நடனமும் ரசிக்கும்படியாக இருந்தது.
வில்லன் ஜோஜூ ஜார்ஜின் பாடி லாங்குவேஜ் வேற லெவல்..
ஜெயராமின் காமெடி காட்சிகள் அதிகமாகவே ரசிக்கும்படியாக இருந்தது. நாசர், கருணாகரன், பிரகாஷ்ராஜ், தமிழ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட நடிகர்களிடம் இன்னும் நன்றாகவே உழைப்பை வாங்கியிருக்கலாம்.
சரியான கதை தேர்வு, சரியான திரைக்கதை இருந்தும் ஆங்காங்கே கதை சற்று தொங்கி தொங்கி செல்வது நம்மை சற்று போரடிக்க வைத்து விட்டது.
படத்தின் ஆக்ஷன் காட்சிகள், சூர்யாவின் கடுமையான உழைப்பு, சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, பாடல் இவற்றை எல்லாம் காண வேண்டும் என்றால் கண்டிப்பாக ரெட்ரோ ஒருமுறை அல்ல இருமுறை கூட விசிட் அடிக்கலாம். சிரிப்பு காட்சிகள், சண்டைக் காட்சிகள் இரண்டையும் காட்சிப்படுத்திய விதம் அருமை.
அந்தமான் அழகு, முதல் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி இவற்றையெல்லாம் தனது கேமராவில் நன்றாகவே ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
மொத்தத்தில் ரெட்ரோ ஆக்ஷன் அலப்பறை.