செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

இந்திரா மிரட்டல் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

 

 

 

இந்திரா மிரட்டல் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

 

இயக்கம்: சபரீஷ் நந்தா

நடிகர்கள்: வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்சாடா, அனிகா

ஒளிப்பதிவு: பிரபு ராகவ்

இசை: அஜ்மல் தாஹ்சீன்

தயாரிப்பு: ஜாபர் சாதிக், இர்பான் மாலிக்

 

தமிழ் சினிமாவில் த்ரில்லர் கதை என்றால் ஒரே டைப்பில் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் பல விதங்களில் அரைத்து தள்ளுவார்கள்…

ஆனால்…

இந்திரா சற்றே வித்தியாசமான கோணத்தில் யோசிக்க முடியாத திரைக்கதையோடு வந்திருப்பது சற்றே ஆறுதல்…

சரி அப்படி என்ன வித்தியாசம்னு யோசிக்கிறீங்களா…

வாங்க கதைக்குள்ள போகலாம்…

 

ஹீரோ வசந்த்ரவி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரா இருந்தாலும் ஒரு நாள் நல்லா குடிச்சிட்டு  போலீஸ் ஜீப்பை விபத்தில் சிக்க வைத்ததால சஸ்பென்ஸ் ஆக்கப்படுகிறார்..

வீட்ல சும்மா இருப்பதால் குடிக்கு அடிமை ஆகிறார்… ஒருகட்டத்தில், குடியால் பார்வையை பறிகொடுக்கிறார் வசந்த் ரவி. இவரின் காதல் மனைவியான மெஹ்ரின். ஹீரோவை கண்ணுக்கு கண்ணாக இருந்து கவனிக்கிறார்.

இன்னொரு பக்கம் பல இடங்களில் பலர் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் கையின் மணிக்கட்டு பகுதி மட்டும் துண்டாக்கப்பட்டு எங்கெங்கோ வீச்சப்படுவதால் குற்றவாளியை பிடிக்க  போலீஸ் அலைகிறது…

ஜாலி மேனாக சுற்றிவரும் வில்லன் சுனில்தான் இந்த கொலைகளை செய்கிறார் என்றாலும் அவரை போலீசால் பிடிக்கமுடியவில்லை.

இந்த சூழலில் திடீரென காதல் மனைவியை யாரோ கொன்று விடுகிறார்கள். இந்த கொலையிலும் அவளின் கை மணிக்கட்டு வெட்டப்பட்ட்தால் அந்த தொடர் கொலைகளை செய்த சைக்கோதான் இந்த கொலையையும் செய்திருக்கலாம் என போலீஸ் சந்தேகப்படுகிறது.

இந்த சூழலில் ஒரு சின்ன விஷயத்தில் சுனில் போலீசில் சிக்குகிறார்… அவர்தான் ஹீரோயினை கொன்றாரா? கண் தெரியாத ஹீரோ கொலையாளியை பிடித்தாரா? இதற்கெல்லாம் பின்பாதியில் டிவிஸ்ட் வைத்து பதில் சொல்கிறார் இயக்குனர்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் திரைக்கதை சில கிளைக்கதைகளோடு வேகம் எடுப்பது படத்துக்கு பலம் சேர்க்கிறது.

கதையின் நாயகனான வசந்த் ரவி, இந்திரா எனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் வலம் வருகிறார். சில காட்சிகளில் ஷாக் ஆக்கி ஒரு சில காட்சிகளில் பரிதாப பட  வைத்து அசத்தி இருக்கிறார் வசந்த் ரவி.

ஹீரோயின் மெஹ்ரின் பிர்சாடா. காதல், கோபம், வெறுப்பு, பயம் என பல காட்சிகளில் சபாஷ் போட வைத்து தமிழ் சினிமாவில் ரசிகர்களை சேர்த்துக் கொண்டார்.

படத்தின் வில்லனான சுனில் வரும் காட்சிகளில் எல்லாம் பதற்றம்  பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. கொடூரமாக செய்யும் கொலையை கூட   தனக்கேற்ற பாடி லேங்குவேஜ்’ல் ரசித்து ரசித்து பயங்கர சைக்கோத்தனத்தை காட்டி மிரள வைத்திருக்கிறார்.

குறிப்பாக அவர் வரும் காட்சிகளில் வரும் கிளாசான பின்னணி இசை தூள் கிளப்பி மிரட்டுகிறது.

முதல் பாதியில் ஒருவித மிரட்டல் இருந்தால் இரண்டாம் பாதியில் அழகாக தொடங்கி அதிர்ச்சியாக முடிவது மிரட்டல் ரகம்.

இரண்டாம் பாதியில் பாவாடை தாவணியில் அழகாக வரும் அனிகாவும், அந்த மலையாள நடிகரும் சரியான தேர்வு. அதிலும் அனிகா ஜோடியான நடிகர் பயத்தை கொடுத்து பயங்கரமாக மிரட்டுகிறார். மற்றவர்களின் நடிப்பை அசால்ட்டாக தூக்கி சாப்பிடுகிறார்.

ஒரு த்ரில்லர் கதையை கையில் எடுத்து அதில் பரபரவென திரைக்கதை அமைத்து அதை சரியான நடிகர்களோடு நகர்த்தி படம் பார்க்கும் அனைவரையும் அடுத்த காட்சியை யூகிக்க முடியாதபடி  சீட்டின் நுனிக்கு வரவைத்து மிரட்டி இருக்கிறார் இயக்குனர் சபரீஷ் நந்தா… இந்த மிரட்டலுக்காக சபரீஷ் நந்தா… சபாஷ் நந்தா.

ஒரு படத்தில் முதல் பாதி ஒரு கதை, பின் பாதியில் ஒரு கதையென இரண்டு கதை கொடுத்து அதை சரியாக இணைத்து கொடுத்திருப்பது படத்துக்கு பலம்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இப்படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.

மொத்தத்தில் விறுவிறுப்பான த்ரில்லர் கதையை ரசிக்கும் நபர்களுக்கு இது சரியான படம். இந்திரா மிரட்டல் ரகம்!

 

கோடங்கி

3.5/5

 

108 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன