செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

ஸ்டாலின் ஆபீஸ் ஆகிறது கோபாலபுரம் கலைஞர் இல்லம்..!

குருப்பெயர்ச்சி ஸ்பெஷல்
ஸ்டாலின் ஆபீஸ் ஆகிறது கோபாலபுரம் கலைஞர் இல்லம்..!

இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் அரை நூற்றாண்டுகளாக கோலோச்சி வந்த இடம் கோபாலபுரம் கலைஞர் இல்லம்.
பல நேரங்களில் பிரதமரை தீர்மானித்த பேச்சுக்களை இங்குதான் முடிவு செய்திருக்கிறார்கள் என்றாலும் மிகையில்லை. இந்த வீடு 1955-இல் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே கருணாநிதி பெயரில் அந்த வீடு வாங்கப்பட்டுள்ளது.

அப்போது முதல், இறுதியாக மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு வரை அந்த வீட்டில் தான் கருணாநிதி வாழ்ந்தார். இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை அந்த வீட்டின் படி ஏறி இறங்காத அரசியல் ஆளுமைகளே இல்லை என்று கூறலாம்.
அத்தனை சிறப்புமிக்க அந்த வீட்டை, தானும் தன் மனைவி தயாளு அம்மையாரும் மறைந்த பின் இலவச மருத்துவமனையாக மாற்றியமைக்கப்படும் என கருணாநிதியே அறிவித்து அதற்கான பத்திரப்பதிவு வேலைகளும் 2009-ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டன.

இந்நிலையில், கருணாநிதியின் மறைவுக்கு பிறகு இப்போது அவர் மனைவி தயாளு அம்மையார் வீட்டில் இருந்த படியே ஓய்வு பெற்று வருகிறார்.

எப்போதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மாற்றுக் கட்சித் தலைவர்களின் வருகை என பரபரப்புடனே காணப்படும் கருணாநிதி வீடு அமைந்திருக்கும் கோபாலபுரத்தின் நான்காவது குறுக்குத் தெரு, தற்போது அமைதியாகிவிட்டது.
அரை நூற்றாண்டுகளாக பெரும் ஆளுமையோடு காணப்பட்ட வீடு இப்போது அமைதியாகிவிட்டதோடு, கலைஞர் என்ற சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டதை ஏற்க முடியாத திமுக முக்கிய பிரமுகர்கள் பலரும் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஸ்டாலின் அரசியல் பயணத்தை தொடங்கினால் ஒரே நேரத்தில் ஸ்டாலின் மீதான பார்வையும், கலைஞர் என்ற ஆளுமையும் மறக்கப்படாமல் இருக்கும் என கூறப்பட்டது.


அதேநேரம், மறைந்த கருணாநிதியாக இருந்தாலும், ஸ்டாலினாக இருந்தாலும் அதிகம் நாத்திகம் பேசினாலும் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் ஆகட்டும், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினாக இருந்தாலும் இருவரும் இறைவழிபாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடைசிவரை அணிந்திருந்த மஞ்சள் துண்டு குறித்து கூட ஆஸ்தான ஜோதிடரின் அறிவுரையின்படியே அதை அணிந்து வந்ததாக கூறப்பட்டது.


இப்போது, அதேபோன்ற ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் கோபாலபுரம் வீடு விரைவில் ஸ்டாலின் அலுவலகமாக மாறும் என்று கூறப்படுகிறது. செனடாப் சாலையில் உள்ள வீட்டில் இருந்து தினமும் கோபாலபுரம் அலுவலகத்திற்கு வந்து அதன்பின் அறிவாலயம் செல்ல ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதேநேரம், ஏற்கனவே தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்கவில்லை என ஸ்டாலின் சகோதரர் அழகிரி அடிக்கடி ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகிறார். சமீபத்தில் சென்னையில் பிரமாண்ட அமைதி பேரணி நடத்தினார். இந்த சூழலில், கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலின் அலுவலகம் அமைத்தால் அதை அழகிரி ஏற்பாரா… அல்லது அதற்கும் வழக்கம்போல கடும் எதிர்ப்பு எதையும் கிளப்புவாரா என்ற பரபரப்பும் ஒருபக்கம் விவாதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்த அலுவலக திட்டத்தை வடிவமைத்ததே துர்கா ஸ்டாலின்தானாம். அவருடைய ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையின்பேரிலேயே இந்த அலுவலக மாற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
குருப்பெயர்ச்சி நடைபெறும் தினத்தில் இருந்து இந்த இடமாற்றம் ஸ்டாலினுக்கும் அவர் அரசியலுக்கும் கை கொடுக்கும் என ரொம்பபே நம்புகிறார்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

நாமும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்த இடமாற்றம் குருப்பெயர்ச்சியால் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றுகிறதா… இல்லையா என்பதை குறித்து..!

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன