வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

 

 

 

தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் என்ன சாதித்தார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளை பெற்றுள்ளது முதல் சாதனை.

பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இது இரண்டாவது சாதனை.

ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்றனர்.

ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் ஒரு பாராளுமன்ற தேர்தலில் நின்று இத்தனை லட்சம் வாக்குகளை பெற்றது 3வது சாதனை.

சில வேட்பாளர்கள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்கள்.

ஒரு கட்சியாக ஆரம்பித்து ஒன்றரை ஆண்டு நிறைவடையாத மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த மக்கள் செல்வாக்கை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருக்காதா… பல ஆண்டுகளாக அரசியலில் ஊறிப்போன கட்சியின் வேட்பாளர்கள் கூட நான்காம் இடம் பெறும் நிலையில் பிறந்த சில மாதங்களில் கமலின் கட்சி பெற்ற வாக்குகள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருக்கிறது.

 

இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் போனாலும் தனித்து களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்று அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையில் சிக்கி இருக்கிறார்.

கமலின் இந்த சாதனையை நிஜத்தில் கமலே எதிர்பார்த்திருக்க மாட்டார். அதே நேரம் கமலின் இந்த சாதனை அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தனி மரியாதையை ஏற்படுத்தும்.

ஏதாவது தேசிய கட்சியோ மாநில கட்சியுடனோ கூட்டணி அமைத்தால் சட்டசபை வரலாற்று பதிவில் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் தனி இடம் பிடிக்கும்.

இந்த சாதனை படைக்க கமல்ஹாசன் அரசியலில் இன்னமும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும்.

அதை விட்டு மீண்டும் அரிதாரம் பூசி அலங்கார வேஷங்கள் போட்டு திரையில் மட்டும் கவனம் செலுத்தினால் அரசியல் களத்தில் கமல் எனும் பிறந்த குழந்தை சவலை பிள்ளையாகத்தான் இருக்கும்.


இந்நிலையில், இந்த தேர்தல் தோல்வி குறித்து சென்னையில் பேட்டியளித்த கமல்ஹாசன், ‘தேர்தல் தோல்வியால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

803 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன