நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

258 Views

 

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

நடிகர் சங்கத்திற்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடப்பது தெரிந்ததே.

முந்தைய பாண்டவர் அணி சார்பில் ஒரு டீமும், ஐசரி கணேஷ்-பாக்யராஜ் கூட்டணி தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி பெயரில் ஒரு டீமும் களத்தில் நிற்கிறார்கள்.

29 பதவிகளுக்கு 76பேர் நிற்கிறார்கள்.

விஷால் தலைமையில் உள்ள பாண்டவர் அணி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எதையும் வைக்க முடியாததால் பாக்யராஜ் -ஐசரி கணேஷ் அணி நடிகர் சங்க கட்டட பணிகள் தாமதத்தை கையில் எடுத்துள்ளது.

இதற்கிடையில் பாண்டவர் அணியில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை தவிர மற்ற எந்த பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.

அதே நேரம் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ஒருகோடி ரூபாய் நிதி கொடுத்து, சுமார் 2 கோடிவரை 1.1 சதவீத வட்டியில் கடன் கொடுத்ததோடு பல நூறு நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் தனது தந்தையின் பெயரில் பென்ஷன் நிதி உதவி வழங்கி வருவதும் ஐசரி கணேஷ் தான்.

இத்தனை உதவிகள் செய்து பாண்டவர் அணியை தாங்கி பிடித்த ஐசரி கணேஷ் திடீரென விஷாலுக்கு எதிராக தேர்தலில் நிற்பது ஏன்?

இந்த கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கிய போது கிடைத்த தகவல்கள் ரொம்ப சாதாரணம்…

கடந்த முறை பாண்டவர் அணியை வெற்றி பெற செய்யும் பணியில் இருக்கும் போதே வெற்றி பெற்று வந்ததால் ஐசரி கணேஷ் தயாரிப்பில் விஷாலும், கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பது என்றும் படம் ரிலீஸ் ஆகும் போது தயாரிப்பு செலவு போக மீதம் வரும் லாபம் அனைத்தும் நடிகர் சங்க கட்டடத்திற்கு என முடிவு செய்தார்களாம்.
இதை தொடர்ந்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா படம் பிரமாண்டமான செலவில் பூஜை போடப்பட்டது. ஆனால் படம் தொடங்காமலேயே கிடப்பில் போடப்பட்டது. ஒரு தரப்பில் விஷால்-கார்த்தி இருவரும் சம்பளம் இல்லாமல் நடிப்பதாக சொல்லிவிட்டு படம் தொடங்கும் நேரம் சம்பளம் கேட்டார்கள் என்றும், இன்னொரு தரப்பு கதையை மாற்ற சொன்னதில் தயாரிப்பாளர் தரப்பு அதை மறுத்ததால் தான் படம் தொடங்கவில்லை என்றும் பல கதைகள் சொல்கிறார்கள்.

அடுத்ததாக ஐசரி கணேஷ் பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவருக்கு எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் அவர்களது ஆதரவு தேவை. அதனால் அரசின் அழுத்தத்தால் விஷாலை எதிர்த்து களம் காண்கிறார் என்கிறது ஒரு கதை.

அரசு ஏன் ஐசரியை களம் இறக்க வேண்டும் என்றால் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் சங்கத்திற்கு அதிக உதவி செய்யும் நபராக ஐசரி கணேஷ் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறார். அதனால் அவரே ஆதரித்த பாண்டவர் அணியை எதிர்த்தால் பாண்டவர் அணி மீது உறுப்பினர்கள் பலருக்கும் அதிருப்தி ஏற்படும் என்றும் அதை பயன்படுத்தி தேர்தலில் விஷாலை தோற்கடிக்கலாம் என்றும் ஒரு கதை சொல்கிறார்கள்.

அதோடு நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட் போன்றவற்றில் கிடைத்த தொகை எவ்வளவு, அதில் ஏதும் முறைகேடு நடை பெற்றிருக்கிறதா என ஒரு பக்கம் ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என தேடும் வேலையை விஷால் கூடவே இருந்து திடீரென அணி மாறிய ஒரு நடிகையும் ஒரு நடிகரும் கையில் எடுத்திருக்கிறார்களாம். அதில் ஏதாவது தகவல் கிடைத்தால் அதை வைத்து விஷாலை வீழ்த்த திட்டம் எனவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

அடுத்ததாக கடந்த முறை பாண்டவர் அணியை வெற்றி பெறச் செய்தது நாடக நடிகர்களின் ஓட்டுக்கள்தான். கடந்த முறை பூச்சி முருகன், ஜெரால்டு, ரித்திஷ் ஆகியோரின் தீவிர முயற்சியில் இந்த வாக்குகளை ஒருங்கிணைத்து பாண்டவர் அணி வெற்றி பெற்றது.

பூச்சி முருகன் , ஜெரால்டு போன்றவர்கள் இப்போதும் பாண்டவர் அணி பக்கமே இருக்கிறார்கள். அதிலும் பூச்சி முருகன் இந்த முறை துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

கடந்த முறை இவர்கள் செய்த பணியை இந்த முறை கருணாஸ் கையில் எடுத்து நாடக நடிகர்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து திரும்பி இருக்கிறார்.

இந்த முறை ரித்திஷ் மரணம் ஐசரி கணேஷ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தாலும் அவர் இடத்தை நிரப்ப ராதாரவி உதவியை நாடி இருக்கிறார்கள். இந்த ராதாரவி மீது நடிகர் சங்க நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது. சமீபத்தில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக ராதாரவி, சரத்குமார் இருவரையும் மாவட்ட எஸ்.பி.விசாரணை செய்ய சம்மன் அனுப்பி இருந்தார்கள். நேற்று இந்த நில மோசடி வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட போலீசில் விஷால் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டு வந்தார்.

ஆக நடிகர் சங்க நிலத்தை மோசடி செய்த ராதாரவியை நாடக நடிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஐசரி கணேஷ் நியமித்திருப்பது பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ராதாரவியை பகிரங்கமாக சுவாமி சங்கரதாஸ் அணி தங்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அமர்த்தியது ஐசரி கணேஷ் மீதான நம்பகதன்மையை குறைத்திருக்கிறது. காரணம் அந்த நடிகர் சங்கத்தில் முறைகேடு செய்தார் என்று கடந்த முறை எந்த ராதாரவியை குற்றம் சாட்டினாரோ அதே ராதாரவியை இந்த முறை தனக்கு சாதகமாக வாக்கு சேகரிக்க அனுப்பினால்…

அடுத்ததாக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிர சுற்றுப்பயணம் செய்யும் ராதாரவி அங்கே உள்ள நாடக நடிகர்களை விஷாலுக்கு எதிராக வாக்களிக்க பேசி வருகிறாராம். ஆனால் பல ஊர்களில் ராதாரவியின் கருத்து எடுபடாமல் போவதால் “தேர்தலே நடை பெறாது. கோர்ட்டில் தடை பெறுவோம்” என்று பேசியிருக்கிறார் ராதாரவி.

தேர்தலே நடை பெறாது என்று ராதாரவி சொல்வதற்கு என்ன காரணம்… ராதாரவி கூடவே இருக்கும் ஒருவர் போட்ட வழக்கு 13ம் தேதி விசாரணைக்கு வருகிறதாம். இந்த வழக்கின் முகாந்திரமே “சட்டப்படி பதவி காலம் முடிந்தும் தேர்தல் நடத்தாமல் 6 மாதம் பதவி நீடிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, 9 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்துவது தானாம்”.

ஒரு வேளை தேர்தல் ரத்து செய்வதற்கான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் மறு நாளே தயாரிப்பாளர் சங்கத்தில் எப்படி அரசு தலையிட்டு ஒரு ரிசீவரை நியமித்து, ஒரு கமிட்டியை போட்டதோ அதே போல அதிரடி முடிவுகளை எடுப்பார்களாம்.

இத்தனை களேபரத்திற்கும் ஒரே காரணம் ” அரசியல்”… சினிமா நடிகர் சங்கத்திற்குள் இருக்கும் அரசியலும், நடிகர் ஒருவர் அரசியலுக்கு வருவதை தடுக்க வெளியில் உள்ள அரசியலும்தான் காரணம்.

விஷாலுக்கு அரசியல் ஆசை இருக்கிறது போதா குறைக்கு சமீபத்திய அரசியல் குழந்தை கமலும் தன் கட்சி சார்பில் ஆளும் கட்சியை தேர்தல் நேரத்தில் கிழித்து தொங்க விட்டிருந்தார். அவரும் விஷாலுக்கு பகிரங்கமாக ஆதரவு தருகிறார்.

இத்தனை கதைகள்… பரபரப்புகளை தாண்டி ஜனநாயக ரீதியாக ஒரு கலைத்துறை தன் சீரிய பண்பாட்டை காக்குமா… அல்லது அரசியல் அழுத்தத்தால் அமுங்கி சரியுமா என்பது 23ம் தேதி தெரியும்.

– கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *