வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

தோல்வி பயம்… அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் – கோடங்கி ஸ்பெஷல்

 

தோல்வி பயம்… அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் – கோடங்கி ஸ்பெஷல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஜானகி எம்.ஜிஆர். கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன.

தலைவர் பதவிக்கு பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் நடிகர் நாசரும், சுவாமி சங்கரதாஸ் அணியில் இருந்து கே.பாக்யராஜூம் போட்டியிடுகின்றனர். இருதரப்பினர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது தேர்தலுக்கு ஒரு திடீர் சிக்கல் எழுந்துள்ளது


நடிகர் சங்க தேர்தலை ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்துவது குறித்து காவல்துறை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

இந்த கடிதத்தில், ‘நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதன்படி நடிகர் சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, ஒற்றுமையற்ற சூழல் நிலவுகிறது. நீதிபதிகளின் வீடுகள், முதலமைச்சர், அமைச்சர்கள் பயணிக்கும் பாதை என்பதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் என்பதால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட வாய்ப்பு உள்ளது. அதனால் பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே அங்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பது நல்லது எனக் குறிப்பிட்டு அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

கடிதத்தில் உள்ளது போல நடிகர் சங்க உறுப்பினர்கள் 8 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்ற கணக்கே தவறு.

மொத்த உறுப்பினர்கள் 3 ஆயிரத்துக்கும் கொஞ்சம் கூடுதலாகதான் இருக்கிறார்கள். அதில் கடந்த முறை ஆயிரத்து ஐநூறுக்கும் குறைவானவர்களே ஓட்டு போட்டனர்.

அதிலும் தேர்தல் நாள் ஞாயிறு விடுமுறை தினத்தில் தான் நடக்கிறது. அதோடு இந்த இடத்தில் தான் தேர்தல் என பாதுகாப்பு வழங்குங்கள் என மனு கொடுத்து பல நாட்களுக்கு பின் அங்கே பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என காவல் துறை கடிதம் கேலிக் கூத்தாக இருக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் யார் அழுத்தத்தால் காவல் துறை இப்படி கடிதம் அனுப்புகிறார்கள் என்ற கேள்வி சாதாரணமாகவே எழும்..!

அதோடு பதிவுத்துறை தலைவர் சங்க பதிவாளருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார். அந்த கடிதத்தில் புகார்தாரர்கள் என 4 பேர்களின் விவரங்களை குறிப்பிடும் அதே நேரத்தில் அதில் நடிகர் எஸ்.வி.சேகர், ஏழுமலை ஆகிய இருவரின் புகார் மனுக்கள் பெறப்பட்ட தேதியே குறிப்பிடப்படவில்லை. அவசர கதியில் ஏதோ அழுத்தத்தால் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது போல தெரிகிறது.
அதோடு, ஓய்வு பெற்ற ஒரு நீதிபதிதான் இந்த தேர்தலை நடத்துகிறார்.

ஏற்கனவே பதிவுதுறையில் நன்கு விசாரித்து விதி மீறல்கள் எதுவும் இல்லை என்று பதிவுத்துறை பதிவாளர் சான்று அளித்த பிறகே தேர்தல் தேதியை தேர்தல் அதிகாரி பத்மநாபன் அறிவித்தார்.

அப்படியிருக்க அதே பதிவுத்துறை தலைவர் தேதி குறிப்பிடாத புகார் மனுக்கள் வந்துள்ளது என்றும் அதன் பேரில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் கடிதம் அனுப்புவது…

அதிலும் குறிப்பாக தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் கடிதம் அனுப்புவதும் ஜனநாயக கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீது சரியான குற்றச்சாட்டு எதையும் ஆதாரத்துடன் வைக்க முடியாததால் தேர்தல் நடந்தால் தோல்வி அடைவோம் என தெரிந்து கொண்ட ஐசரி கணேஷ் – பாக்யராஜ் கூட்டணியின் சுவாமி சங்கரதாஸ் அணி தனது செல்வாக்கால் தமிழக அரசின் துணையுடன் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் எந்த அணியையும் சாராத நடுநிலை உறுப்பினர்கள், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

1,292 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன