வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றி தேர்தல் பிரசாரத்தில் கமல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே” என்று கூறிய கமல் மீது பல புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக கமல் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் முன் ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார்.

“கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி” என்று திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் நிறுவனர் நாராயணன் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதில், கோட்சே பற்றி பேசிய கமல் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரிய போது, இது தொடர்பாக தலைவர்கள் பேசக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

அதனை மீறி தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி அசோக்நகர் போலீசார், திருமாவளவன் மீது கலகம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம்153, 505 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

1,154 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன