
விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!
நடிகர் விஜய் நடித்த பிகில் பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்த விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். சுமார் 35 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரிய ஊடகம் மற்றும் தொழில் நுட்பக்கொள்கை வருமான வரி ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள திரைத்துறையை சார்ந்த தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர் மற்றும் அவருடைய வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகிய 4 முக்கியமானவர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை கடந்த 5-ந்தேதி சோதனை நடத்தியது. சமீபத்தில் மிக வெற்றிகரமாக ஓடி ஏறத்தாழ ரூ.300 கோடி அளவுக்கு வசூலான ஒரு படத்தின் பிரமாண்ட வெற்றி தொடர்பாகத்தான் இந்த சோதனை நடந்தது. சென்னை, மதுரை உள்பட 38 இடங்களில் சோதனை நடந்தது.
குறிப்பிட்ட அந்த பைனான்சியருக்கு (அன்புசெழியன்) சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி கைப்பற்றியது தான் இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும். இதுமட்டுமின்றி, சொத்து ஆவணங்கள் பிராமிசரி நோட்டுகள், அடமானமாக வழங்கப்பட்ட பின் தேதியிட்ட காசோலைகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை ரூ.300 கோடிக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வினியோகஸ்தர், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவராகவும் இருக்கிறார். அவரது நண்பர் வீட்டில் மறைத்துவைக்கப்பட்ட இடத்தில் இருந்து, வினியோகஸ்தருக்கு சொந்தமான ஒரிஜினல் தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டன. அந்த தஸ்தாவேஜூகள் தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
விஜய் சொத்துகள் குறித்து புலனாய்வு
படத் தயாரிப்பாளரை பொறுத்தவரையில் பட தயாரிப்பு வினியோகம் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஆகியவற்றின் உரிமையாளராகவும் இருக்கிறார். பல படங்களை தயாரித்துள்ளார். அவரது அலுவலக வளாகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
நடிகர்-நடிகைகளுக்கு கொடுத்த சம்பளம், செலவு மற்றும் உண்மையான ரசீது ஆகியவை புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த பிரபல நடிகரை (விஜய்) பொறுத்தமட்டில், அசையா சொத்துகளில் அவர் செய்த முதலீடு, படத்தில் நடித்ததற்காக அவர் தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிய சம்பளம் ஆகியவை குறித்து இந்த சோதனையில் புலனாய்வு நடக்கிறது. சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
