சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

முதலமைச்சர் நிவாரண நிதி கொடுங்கள்- திரைப்பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

கொரானா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.

 

இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் கொடுத்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் திரைத்துறையினருக்கு அன்பான வேண்டுகோள்.

அன்புடையீர் வணக்கம்.
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி, மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பரவலை தடுத்து மக்களை காப்பாற்றும் துரித நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் திறம்பட பணியாற்றி வருகின்றன. இந்த போர்க்கால நடவடிக்கைக்கு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் மாநில அரசுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது.

இதற்கு பொதுமக்கள் அரசுக்கு கரம் கொடுத்து தங்களால் இயன்ற நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, நான் எனது பங்காக ரூ.2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம்) நிதி வழங்கியிருக்கிறேன்.

பாலிவுட்டில் அக்ஷயகுமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. அதுபோல் தெலுங்கு தேசத்தில் தெலுங்கு நடிகர்கள் பலரும் பெரும் தொகையினை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்படத்துறையினரும் நிதி வழங்க முன்வரவேண்டும்.

திரைத்துறை என்பது பொதுமக்களோடு நேரடி தொடர்புடைய துறையாக விளங்கி வருகிறது. அவர்கள் நமக்கு ஆதரவு தரவில்லை என்றால் திரையுலகமே முடங்கிவிடும். நடிகர்களை இளைஞர்கள் தங்களது குடும்பத்திற்கும் மேலாக மதித்து கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் இன்று கொடூர வைரசினால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய உயிரே பறிபோகும் நிலையில் தவித்து வருகிறார்கள்.

அவர்களை காக்க உதவ வேண்டியது நமது கடமையாக உணர்ந்து தமிழ் திரைப்படத் துறையில் தன்னுடைய கடுமையான உழைப்பால் மக்களின் மனங்களை வென்று… உயர்ந்து நிற்கும் உச்ச நட்சத்திரங்கள், முன்னணி கதாநாயகர்கள், கதாநாயகிகள், முன்னணி இயக்குநர்கள், முன்னணி இசையமைப்பாளர்கள், முன்னணி தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய பங்காக நிதயுதவி அளித்து இந்த கொடிய தாக்குதலிலிருந்து போர்க்கால அடிப்படையில் மக்களை மீட்டெடுக்க அரசுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி! வணக்கம்.

376 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன